
நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து இறந்த தாயின் உடலை 15 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் கட்டிக்கொண்டு சென்ற மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் செயல் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாங்குநேரி, வடக்கு மீனவன்குளம், மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலன் (38). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இவரது தாய் சிவகாமியம்மாள் (60) என்பவருக்கு மனச்சிதைவு நோய் பாதிப்பு இருந்துள்ளது. சிவகாமியம்மாள் நெல்லை அரசு மருத்துவமனையில் உள்ள மனவளத்துறையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிவகாமியம்மாளுக்கு வயோதிகம் காரணமாக உடல் நிலை மோசமானதாவும், அதனால் நாங்குநேரி அரசு மருத்துவனையில் சேர்த்து பாலன் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால் திடீரென சிவகாமியம்மாள் கிழே விழுந்து அடிபட்டதாகக் கூறி நேற்று முன்தினம் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருடன் அவரது மகன் பாலன் உடனிருந்தார்.
இந்நிலையில் நேற்று காலையில் 9 மணியளவில் திடீரென பாலன் மருத்துவமனையில் தாயாரை வீல்சேரில் அழைத்துக்கொண்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
அங்கிருந்து தாயாரை அழைத்துச் சென்ற அவரை சைக்கிளில் உட்கார வைத்தார். ஆனால் அவரால் சரியாக உட்கார முடியாததால் பாலன் தாயை சைக்களில் கயிறால் கட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு உள்ளார்.
அங்கிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் அவர் சைக்கிளில் தாயை கட்டி வைத்துக்கொண்டு நெல்லை- கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் சென்று உள்ளார்.
நேற்று இரவு மூன்றடைப்பு பாலம் அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிவகாமியம்மாள் இறந்ததை அறிந்து உள்ளனர். அதுகுறித்து பாலனிடம் கேட்டபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டதையும், அதனால் தாயார் இறந்தது தெரியாமல் சைக்களில் கொண்டு சென்றதையும் அவர்கள அறிந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மூன்றடைப்பு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சிவகாமியம்மாளின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் பாலனிடம் விசாரித்ததில் அவர், எனது தாயை அழைத்துக்கொண்டு மதியம் கோயிலுக்குச் சென்றேன். அவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். அப்போது அவர் சாப்பிடவில்லை. அதனால் அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தேன்’ என தெரிவித்து உள்ளார். மனநிலை பாதிப்பால் தாயார் இறந்தைக் கூட அறியாமல் மகன் இருப்பதை போலீசார் அறிந்தனர்
இதையடுத்து மூன்றடைப்பு போலீசார் கீழ கடையத்தில் உள்ள அவரது சகோதரர் சவரிமுத்து (43) என்பவரை அழைத்து புகார் மனு பெற்று விசாரித்து வருகின்றனர்.
மனநிலை பாதிப்பால் தாய் இறந்தது கூட தெரியாமல் உடலை சைக்கிளில் கொண்டு வந்த மகனின் செயல் நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.