இந்தியாவை பொறுத்தவரையில் காவல்துறை போன்ற விசாரணை அதிகாரம் உள்ள துறைகளில் சேர விரும்பும் இளைஞர்கள் அதற்கான Service Recruitment Board வழியாகச் செல்ல வேண்டும். அல்லது UPSC தேர்வு எழுதி ஐ.பி.எஸ் அதிகாரியாக வேண்டும்.
இவை இரண்டையும் தவிர இன்னொரு வழியும் இருக்கிறது. பெரும்பாலும் யாரும் அறியாத வழி. Criminology அல்லது Forensic Science படித்து புலனாய்வு, தொழில்நுட்ப அதிகாரிகளாக இணைவது. இந்தியாவில் இந்தப் பணி வல்லுநர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
தமிழகத்தில் Criminology, Forensic Science படிக்க அரசு சார்ந்த நிறுவனங்களில் வாய்ப்புகள் குறைவு. மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வும் குறைவு. M.Sc in Criminology and Criminal Justice என்ற படிப்பு சென்னைப் பல்கலைக்கழத்திலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் உள்ளது.
இளநிலைப் படிப்புகள் சில தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ளன. அவ்வளவுதான். பெரும்பாலும் சீருடைப்பணியில் ஆர்வமிக்க, விழிப்புணர்வு கொண்ட மாணவர்கள் மட்டுமே இந்தப் படிப்புகளைத் தேடிச் செல்கிறார்கள்.
குற்றப் புலனாய்வில் ஃபாரன்சிக் அலுவலர்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவார்கள். களத்தில் நின்று அறிவியல் ரீதியாக ஆதாரம் சேகரிப்பதில் தொடங்கி விசாரணை அமைப்பில் ஆவணங்கள் தயாரிப்பது, நீதி வழங்குவது வரைக்கும் இவர்கள் பங்களிப்பதுண்டு. இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இந்தப் படிப்புகளை முடித்தவர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.
Forensic Science, Criminology படிப்புகளுக்கென்றே இந்தியாவின் மிகச்சிறந்த ஓர் அரசுக் கல்வி நிறுவனம் உண்டு. தமிழகத்தில் பலரும் அறிந்திராத நிறுவனம் அது. முன்பு டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய அந்த நிறுவனம், இப்போது குஜராத் மாநிலம் காந்தி நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. அதன் பெயர், National Forensic Sciences University. சுருக்கமாக NFSU என்பார்கள். இது 1972-ம் ஆண்டு டெல்லியில் Institute of Criminology and Forensic Science என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பிறகு இதன் பெயர், Lok Nayak Jayaprakash Narayan National Institute of Criminology & Forensic Science என்று மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் முதுநிலைப் படிப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன. 2020-ல் குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்டு National Forensic Sciences University என்று தன்னாட்சி கொண்ட பல்கலைக்கழகமாக இது மாற்றப்பட்டது. இது மத்திய உள்துறையின் கீழ் வருகிறது.
திரிபுராவின் அகர்தலா, கோவாவின் பாண்டா, போபால், புனே, கௌகாத்தி, மணிப்பூரின் பங்கே, கர்நாடக மாநிலம் தார்வாட் ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்தின் வளாகங்கள் உள்ளன. இந்தியா தாண்டி தற்போது உகாண்டாவிலும் ஒரு வளாகம் திறக்கப்பட்டுள்ளது. இளநிலை, முதுநிலை, டிப்ளமோ எல்லாம் சேர்த்து சுமார் 5,000 இடங்கள் இந்த நிறுவனத்தில் உண்டு. இங்கு வழங்கப்படும் படிப்புகள் எல்லாமே மிகவும் தனித்துவமானவை. நான் தமிழகத்தில் இருந்து நிறைய மாணவர்களை இந்த நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளேன். இந்தியாவில் உள்ள 9 வளாகங்களில் டெல்லி வளாகம் பழைமையானது. நல்ல பேராசிரியர்கள், சிறப்பான லேப் வசதிகள், பெரிய நூலகம் எல்லாம் உண்டு. பிற வளாகங்கள் இப்போதுதான் கட்டமைக்கப்படுகின்றன.
பார்மசி படிப்புகளும் இங்கே படிக்க முடியும். B.Pharm முடித்தவர்கள் M.Pharm Forensic Pharmacy, Pharmaceutical Quality Assurance படிப்புகளில் சேரலாம். கலை, அறிவியல் படிப்புகள் தவிர தொழில்நுட்பப் படிப்புகளும் உண்டு. M.Tech Computer Science & Engineering (Cyber Security) ஒருங்கிணைந்த ஐந்தாண்டுப் பட்டப் படிப்பில் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் சேரலாம். இவை தவிர Artificial Intelligence and Data Science (Cyber Security), Cyber Security, Robotics and Automation, Civil Engineering (Forensic Structural Engineering) போன்ற படிப்புகளும் உண்டு.
பிளஸ் டூ முடித்தவர்களுக்கான ஒருங்கிணைந்த ஐந்தாண்டு MBA படிப்புகளும் உள்ளன. Forensic Accounting and Fraud Investigation, Cyber Security Management, Hospital and Healthcare Management, Business Analytics and Intelligence ஆகிய படிப்புகள் MBA-வில் உள்ளன.
DNA Forensics, Fingerprint Science, Forensic Document Examination, Crime Scene Management, Fingerprint Science, Forensic Document Examination, Forensic Ballistics, Cyber Crime Investigation, Investigative Psychology, Cyber Psychology, Internet Governance, Cyber Physical System, Semiconductor Security and Forensic Investigation, Forensic Journalism, Humanitarian Forensics, Disaster Victim Identification, Industrial Safety, Hygiene & Environmental Management போன்ற PG Diploma படிப்புகள் இங்கே உண்டு. போட்டோகிராபியில் ஆர்வமுடையவர்கள் Crime Scene Photography என்ற PG Diploma படிப்பு இங்கே சேரலாம்.
Diploma Canine Forensics என்ற ஒரு படிப்பு இருக்கிறது. டெல்லி வளாகத்தில் இருக்கும் இந்தப் படிப்பில் போலீஸ் மோப்ப நாய் பிரிவில் டிப்ளோமா முடித்தவர்கள் சேரலாம். அல்லது, நாய்களோடு மூன்றாண்டுகள் நெருக்கமான பரிச்சயம் உள்ள, பிளஸ் டூ-வில் 50% மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம்.
National Forensic Sciences University-யில் தனித்துவமான சட்டப் படிப்புகளும் உண்டு. LL.M. (Cyber Law and Cyber Crime Investigation), B.B.A. LL.B. (Hons.), LL.M. (Criminal Law and Criminal Justice Administration), LL.M. (Criminal Law and Criminal Justice Administration) போன்ற சட்டப்படிப்புகள் இங்கு உள்ளன.
ஐந்தாண்டு Criminolgy and Forensic Sciences படிப்புக்கு பிளஸ் டூ-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை எடுத்துப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு உண்டு. ஒருங்கிணைந்த M.Tech படிப்புகளுக்கு பிளஸ் டூ-வில் கணிதத்தையும் இயற்பியலையும் கட்டாயம் எடுத்துப் படித்திருக்க வேண்டும். அவர்களுக்கும் எழுத்துத் தேர்வு உண்டு. M.Sc., (Digital Forensics) படிப்பில் சேர B.E., B.Tech IT, CSc, ECE, BSc IT, CSc அல்லது BCA படித்திருக்க வேண்டும். பெரும்பாலும் PG Diploma படிப்புகளுக்கு பொருத்தமான இளநிலைப் பட்டப்படிப்பு ஒன்றில் 50% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சட்டப்படிப்புகளுக்கு CLAT தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.
இந்திய அளவில் மிகச்சிறப்பான எதிர்காலம் தரும் கல்வி நிறுவனம் இது. சற்று முயன்றால் கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது. களத்தில் இறங்குங்கள் மாணவர்களே!