கோக்கு மாக்கு
Trending

நீலகிரியில் அழிக்கப்படும் வளங்களும், கேரளாவுக்கு கடத்தப்படும் மரங்களும்..!

தமிழகத்திலேயே வனவிலங்குகளுக்கும் வனத்திற்கும் பாதுகாப்பு இல்லாத ஒரே பகுதி நீலகிரி மாவட்டம் கூடலூர் மட்டுமே என்று இன்று அனைத்துதரப்பட்ட மக்களாலும் அறியப்படுகிறது என்றால் அதற்கு மாற்று கருத்து இல்லை.

பந்தலூர்: தமிழ்நாட்டில் ஒரு மாவட்டம் முழுமையாக வனப்பகுதியில் இருக்கிறது என்றால், அது நீலகிரி மட்டுமே. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அற்புதமான பகுதியான நீலகிரி மாவட்டம், தேயிலை காடுகள் அதிகம் நிறைந்த குளுகுளு பகுதியாகவும், இயற்கையாகவே அமைந்த சுற்றுலா தலங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகிறது

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநில எல்லைகளில் வனப்பகுதியில் நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளதால் யானை, சிறுத்தை, புலி உட்பட பல்வேறு விலங்குகள் இருக்கின்றன. நீலகிரி மாவட்டத்தின் இயற்கை வளத்தை பாதுகாக்க, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு வளரக்கூடிய ஈட்டி, தேக்கு, அயனி வகை பலா மற்றும் பலா ஆகிய மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருப்பினும், மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரிய வகை மரங்களை வெட்டிக் கடத்துவது தொடர் கதையாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக கூடலூர் வனத்துறை உயர் அதிகாரி மற்றும் வருவாய் துறையினரின் ஒத்துழைப்போடு, பந்தலூர் பகுதியிலுள்ள மரங்கள் வெட்டப்பட்டு இரவோடு, இரவாக திருட்டுத்தனமாக கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. தற்போது, பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில் பல ஏக்கர் நிலப்பரப்பில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

இந்த நிலம் விவசாய நிலம் என்றும், மரங்கள் வெட்ட அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனுமதி பெறப்பட்டு வெட்டப்பட்ட மரங்களை, எதற்காக லாரிகளில் மூடி கொண்டு செல்கின்றனர் என அப்பகுதி மக்கள் கூடலூர் மாவட்ட வனத்துறைக்கு கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “பட்டா நிலங்களிலுள்ள மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கமிட்டியிடம் அனுமதி பெற வேண்டும். இத்தகைய சூழலில் 2,000 – க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுவது வியப்பளிக்கிறது.

இது போன்ற நடவடிக்கைகளால் கூடலூர் வனக்கோட்டத்தில் வனப்பரப்பு குறைந்து வருகிறது. ஏற்கனவே கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் வனவிலங்குகளுக்கு எதிராகவும் வனநில ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வரும் நிலையில் யானைகள் மற்றும் விலங்குகள் நகரப் பகுதிக்கு படையெடுத்து வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், மரங்கள் மட்டுமின்றி மூங்கில்களும் வெட்டப்படுகின்றன.

இதுகுறித்து காவல் மற்றும் வனத்துறைக்கு புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தேக்கு, சந்தனம் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் மற்றும் குன்னிவாகை, சடச்சி ஆகிய அரிய வகை மரங்களை வெட்டி சாய்த்து, அப்பகுதியின் இயற்கையை சீரழித்து வருகின்றனர் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். நீலகிரி மாவட்டம் குறிப்பாக கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் வாழும் வனவிலங்குகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இன்றளவும் உள்ளது.

மாற்றுப் பாதை: இந்நிலையில், ஓவேலியில் காவல் மற்றும் வனத்துறை அமைத்துள்ள சோதனைச்சாவடி வழியாக வராமல், சட்டவிரோதமாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை, கூடலூர் பகுதியில் விதிமுறைகளை மீறி பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சாலை மக்களுக்கு பயன்படாது என்ற நிலையில், ஓவேலி சோதனைச்சாவடி வழியாக வாகனங்கள் வருவதை தவிர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை அமைத்தது மற்றும் அனைத்து சட்டவிரோத செயல்பாடுகளும் யார் யார் செய்கின்றனர் என்பது பற்றிய முழு விபரங்களும் தெரிந்தும் சம்மந்தபட்ட வனத்துறை , வருவாய் துறையினர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் மௌனம் சாதிக்கின்றனர் .

இதன்மூலமாக, மரங்கள் கடத்தல் மற்றும் சட்டவிரோத செயலுக்காக, சோதனைச்சாவடி வழியாக வாகனங்கள் வராமல் செல்ல சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இந்த சாலையை மூடவும் , சாலை அமைத்த , மரக்கடத்தல் கும்பல் மீதம் இவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள் , போலி சமூக ஆர்வலர்கள் மற்றும் இவர்களுடன் கூட்டு வைத்து சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு கண்மூடி காவல் புரியும் வனத்துறை உயர் அதிகாரிகள் யார் யார் என மத்திய மாநில விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தி அனைவர் மீதும் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button