
பொள்ளாச்சி; ‘நீலகிரி வரையாடானது கடந்தாண்டு கணக்கெடுப்பின்படி, 1,031 மட்டுமே உள்ளது,” என, நீலகிரி வரையாடு திட்ட உதவி இயக்குனர் கணேஷ்ராம் தெரிவித்தார்.
தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளை பாதுகாக்கும் வகையில், நீலகிரி வரையாடு திட்டம் துவங்கப்பட்டது. அத்திட்டத்தின் வாயிலாக, நீலகிரி வரையாட்டின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, திருநெல்வேலி அரும்புகள் அறக்கட்டளையுடன் இணைந்து, பிரசார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
வாகனம் வாயிலாக, நீலகிரி வரையாடு குறித்து பாடல், நாடகம் வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அதில், பொள்ளாச்சி அரசு கலைக்கல்லுாரி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆனைமலை அரசு மேல்நிலைப்பள்ளி, அங்கலகுறிச்சி கைகாட்டி, விக்னேஸ்வரா மெட்ரிக் பள்ளி மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், பொதுமக்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
நீலகிரி வரையாடு திட்டம், வரையாட்டின் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீலகிரி வரையாடு விழிப்புணர்வு குறித்து தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநில ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.
நீலகிரி வரையாடு திட்ட உதவி இயக்குனர் கணேஷ்ராம் பேசியதாவது:
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, நீராறு அணை, சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, மேல் ஆழியாறு, காடம்பாறை, திருமூர்த்தி, அமராவதி அணைகள் வாயிலாக சேகரமாகும் நீர், கோவை, திருப்பூர், கரூர் போன்ற மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம், சோலைக்காடுகள், புல்மலைகளை அடங்கியுள்ளது. இப்புல்மலைகளில் வாழும் ஒரே வனவிலங்கு வரையாடு ஆகும். இது, மேய்ச்சல் வாயிலாக மழை நீரானது வீணாகாமல் புல்வெளியில் சேகரம் செய்யப்படுகிறது.
புல்வெளி பரப்பளவினை தனது எச்சத்தின் வாயிலாக விரிவுப்படுத்துகிறது. மேலும், பண்டைய காலத்தில் லட்சகணக்கில் வரையாடுகள் வாழ்ந்ததாக சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு கணக்கெடுப்பின்படி, 1,031 மட்டுமே உள்ளது. எண்ணிக்கையில் குறைந்து வரும் மாநில விலங்கான நீலகிரி வரையாட்டினை பேணி பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நீலகிரி வரையாடு திட்ட வனச்சரக அலுவலர் செந்துாரசுந்தரேசன், முதுநிலை ஆராய்ச்சியாளர் சுப்பையன், பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் ஞானபாலமுருகன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.