
மசினகுடியில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க நீர் நிரப்பும் பணி முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமார் தலைமையில் துவங்கியது
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டல வனப்பகுதிகளான மசினகுடி, சிங்காரா , சீகூர் வன சரகங்களில் தற்போது வறட்சியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மழைக்காலத்தில் வனப்பகுதிகளில் உள்ள குட்டைகளில் மழைநீர் தேங்கி வன விலங்குகளின் தாகத்தை தணித்து வரும் .
தற்போது கோடை காலம் முன்னரே தொடங்கியதுடன் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், வனப்பகுதிகளில் உள்ள குட்டைகளில் தண்ணீரின் அளவு வேகமாக குறைந்து வருவதாலும் வனத்துறையால் அமைக்கப்பட்டுள்ள செயற்கை குட்டைகளில் முன்கூட்டியே நீர் நிரப்பும் பணிகளை முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமார் தலைமையில் வனத்துறையினர் துவக்கி உள்ளனர்.
மசினகுடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் வனத்துறையினர் நேற்று முதல் தண்ணீர் நிரப்பும் பணிகளை துவக்கி உள்ளனர்.
மசினகுடி வனச்சரகர் பாலாஜி, சீகூர் வனச்சரகர் தயானந்தன், சிங்கார வனச்சரகர் தனபாலன் உள்ளிட்ட வனத்துறையினர் டேங்கர் லாரிகள் மூலம் தரைத்தள தொட்டிகளில் தண்ணீரை ஊற்றி வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, கோடை காலம் முழுவதும் வனவிலங்குகளின் தாகத்தை போக்கும் வகையில் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்கும் வகையில் தினமும் லாரிகளில் வனத்துக்குள் கொண்டு சென்று தண்ணீர் ஊற்றப்படும். கோடை மழை அல்லது பருவமழை தொடங்கி குட்டைகளில் தண்ணீர் நிரம்பிய பிறகு இப்பணி முடிவுக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.