
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா பொய்கை ஊராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட கள்ளம்புளி கிராமம் படிக்காத மேதை காமராஜர் தெரு உள்ளது. இந்த தெருவில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . 20 -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் உள்ளனர் .

இந்நிலையில் பழைய சாலைக்கு பதிலாக இந்த தெருவில் புதிய பேவர் பிளாக் பாதை அமைக்க ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்னர் பழைய மண் பாதையை அப்புறப்படுத்தியுள்ளனர் .

சுமார் 500 மீட்டர் நீளமுள்ள பாதையில் இருந்து ஒப்பந்தகாரார் டிப்பர் லாரி மூலம் 50 லோடு அளவிற்கு மண்ணை எடுத்து சென்றுள்ளார் . எடுக்கப்பட்ட மண் மற்றும் சரளை கற்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு பின்னர் எந்த வித பணிகளும் நடைபெறவில்லை .

இது குறித்து 3வது வார்டு கவுன்சிலர் ரா.சந்திரன் பலமுறை ஊராட்சி அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்திடமும் கேள்வி எழுப்பியும் கோரிக்கை வைத்தும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை .

சாலைபகுதி பள்ளமாக மாறியதால் சாக்கடை கழிவு நீர் மற்றும் மழைநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டு பலரும் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்து வருகின்றனர் .

இது குறித்து சந்திரன் கொடுத்த மக்கள் குறைதீர்ப்பு முகாம் புகார் கடந்த 13/01/2025 தென்காசி மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு முகாம் புகார் மனு எண் – 10786480 – ஆக பதிவு செய்யப்பட்டது . இதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை .

பின்னர் 24/1/2025 ம் தேதி முதல்வரின் முகவரி திட்ட இணைய வழி புகார் ( TN-RDPR-/TK/P/COLL /MGPP/13JAN25/10786480 ) பதிவு செய்யப்பட்டது . அதன் பின்னரும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை . இது குறித்து கவன ஈர்ப்பு போராட்டம் உட்பட பல வகைகளிலும் இந்த தெரு மக்கள் கோரிக்கைகளை யாராவது நிறைவேற்றிவிட மாட்டார்களா என்ன ஏக்கத்துடன் தினமும் கழிவுநீரில் நடந்து சென்று நோய்தொற்று ஏற்பட்டு மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.


சிறந்த நிர்வாகம் நடைபெறுவதாக முதல்வர் அவர்கள் கூறிவரும் நிலையில் முதல்வரின் முகவரி இணைய புகாருக்கு பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை இதற்குமேல் யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியவில்லை என நம்மிடம் வேதனையுடன் தெரிவித்தனர்.