
திண்டுக்கல் மாவட்ட வனத்துறையில் தான் இந்த பண விரயம் நடந்துள்ளது . ஏன் என்பது மட்டும் அதிகாரிகள் வாய் திறந்தால் தான் தெரியும்
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திண்டுக்கல் மாவட்ட வனத்துறைக்கு என்று தனியாக தொலை தொடர்பு வசதி வேண்டும் எனக்கூறி பல லட்ச செலவு செய்து வனத்துறை வாகனங்கள் மற்றும் சோதனை சாவடியில் பொறுத்தும் வகையிலான வாக்கி டாக்கிகள் வாங்கப்பட்டன .
வாங்கிய கையோடு அவை பயன்படுத்தப்படாமல் ஸ்டோர் ரூமில் ஒரு மூலையில் குவித்து வைக்கப்பட்டன . காரணம் குறித்து விசாரித்த போதுதான் திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் எல்லைக்கு உட்பட்ட அய்யலூர் , நத்தம் , சிறுமலை , கன்னிவாடி , ஒட்டன்சத்திரம் , வத்தலக்குண்டு உட்பட எந்த இடத்திலும் வாக்கி டாக்கி சிக்னலகளை பெற்று ஒலிபரப்பும் ட்ரான்ஸ்பாண்டர் சிக்னல் கருவிகள் இல்லை என்றும் முந்தைய காலங்களில் பயன்படுத்தி வந்த ட்ரான்ஸ்பாண்டர் கருவிகளும் முற்றிலும் பயன்படுத்த முடியாத அளவில் வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது .
பிறகு எதற்காக வாங்கப்பட்டது என்ற கேள்விக்கு பதில் சொல்ல யாரும் தயாராக இல்லை . இதுகுறித்து பத்திரிக்கையாளர்களும் தன்னார்வலர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது செயல்படாத புதிதாக வாங்கிய கருவிகளை அனைத்து வனத்துறை வாகனங்கள் , சோதனை சாவடிகளில் பொருத்தி ஆன் செய்து வைத்துள்ளனர் .
இதுவரை பல்வேறு தலைமை அலுவலக ஆய்வுக் குழுக்கள் வந்து சென்ற நிலையில் இந்த மக்கள் பண விரய விசயத்தை யாரும் கண்டுபிடிக்கவில்லையா இல்லை கண்டும் காணாமல் சென்று விட்டனரா என்பது சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.