கோக்கு மாக்கு
Trending

தர்மபுரியில் யானை வேட்டை; கை விலங்குடன் தப்பியவர் சடலமாக மீட்பு

வனத்துறையினர் திட்டமிட்டு கொன்று விட்டதாக செந்தில் உறுவினர்கள் புகார் அளித்துள்ளனர், செந்தில் வெளியில் வந்தால் முக்கிய புள்ளிகள் யாரேனும் சிக்க வாய்ப்பு இருக்கிறதா இதனால் தான் செந்தில் கொலை நடைபெற்றதா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

யானையை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் கை விலங்குடன் தப்பிச் சென்ற நிலையில் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தர்மபுரி மாவட்டம் ஏமனூரில் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் ஆண் யானை ஒன்று சுட்டுக் கொல்லப்பட்ட அதனுடைய தந்தம் திருடப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக வட வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதனடிப்படையில் கொங்கராம்பட்டி பகுதியைச் சேர்ந்த தினேஷ், விஜயகுமார், கோவிந்தராஜ் ஆகியோரை கைது செய்தனர். அதேபோல் செந்தில் என்ற நபரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தருமபுரியில் தந்தத்திற்காக யானை கொலை செய்து, எரிக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள குற்றவாளியை விரைந்து கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில், தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த நெருப்பூர் என்ற இடத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி யானை ஒன்று கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், இந்த யானை, தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டுள்ளதாகவும், ஆதாரங்களை அழிப்பதற்காகவே, அதன் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது.

இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தருமபுரி மாவட்ட வன அதிகாரி ராஜங்கம் ஆஜராகி, நாட்டு துப்பாக்கியால் யானை சுடப்பட்டு, அதன் பின் வேட்டையாடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அப்போது யானை சுடப்பட்டு தான் இறந்தது என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த வன அதிகாரி, யானை வேட்டையாடப்பட்ட இடத்தில் நாட்டுத் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் சிதறிக் கிடந்ததாகவும், யானை வேட்டையாடப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியைத் தேடி வருவதாகவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் வனத்துறை தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன் ஆஜராகி, இந்த வழக்கில் யானையின் உடற்கூராய்வு அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், யானையை வேட்டையாடிய குற்றவாளியை விரைந்து பிடிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டதோடு, வழக்கு தொடர்பான விசாரணை விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 3ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

இந்நிலையில் இன்று ஏமனூர் காப்புக் காட்டு வனப்பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. விசாரணையில் அது கை விலங்குடன் தப்பிய செந்திலின் உடல் என தெரியவந்துள்ளது. அருகிலேயே நாட்டுத் துப்பாக்கி ஒன்றும் கிடைத்துள்ளது. உடையை வைத்து உயிரிழந்து கிடந்தது செந்தில் என உறுதி செய்யப்பட்டுள்ளது. யானை வேட்டையில் ஈடுபட்டதால் வனத்துறையினரே திட்டமிட்டு செந்திலை கொன்றதாக அவருடைய உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தர்மபுரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button