திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் நியாய விலை கடையில் முதியவர் ஒருவர் பொருள் வாங்க சென்றுள்ளார். பொருள் வாங்குவதற்காக நியாய விலை கடையில் தனது குடும்ப அட்டையை கொடுத்துவிட்டு கைரேகை வைத்துள்ளார் .
ஆனால் கைரேகை விழாத காரணத்தால் பொருள் வழங்க இயலவில்லை என்று நியாய விலை கடையில் பணியாளர் கூறிய நிலையில் தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
சாப்பிடுவதற்கு அரிசி கிடைக்காத கோபம் மற்றும் விரத்தி மற்றும் ஆற்றாமையில் இயல்பாக முதியவர் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கைரேகை பதியாததால் தனக்கு பொருட்கள் கிடைக்காத விரக்தியில், இனிமேல் ரேஷன் கடையே கிடையாது, பிச்சை எடுத்தாவது சாப்பிட வேண்டியது தான், ரேஷன் கடை ஊழியரிடம் சண்டையிடுவது என்ன நியாயம், அவர் சட்டப்படி தான் நடக்க முடியும், இல்லாவிட்டால் அவரது வேலை போய்விடும், அரசாங்கம் தன் போன்ற முதியவர்களை சிரமப்படுத்தாமல் முன்பு போல சீட்டில் பில்லினை கொடுத்து அரிசியை வாங்கி செல்ல உத்தரவு இட வேண்டும், வயதான முதியவரான தனக்கு ரேஷன் கடைக்கு வந்து பொருள்கள் வாங்கிச் செல்ல இயலாது எனவே வேறு ஒருவரிடம் கொடுத்து விடுங்கள் என தாசில்தாரிடம் மனு அளிக்கச் சென்றால் அது போன்று உடனடியாக கையெழுத்து போட்டு தர மறுக்கிறார்கள், அதிமுக ஆட்சியிலும் இதுபோன்றுதான் நடக்கிறார்கள், திமுக ஆட்சியிலும் இதுபோன்றுதான் நடக்கிறார்கள், மக்களுக்கு வயதானவர்களுக்கு பயன் தரும் வகையில் எந்த சட்டமும் இல்லை என புலம்பியவாறு சென்றார்.