கோக்கு மாக்கு
Trending

பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான அருள்ராஜ் என்கிற கோழி அருள் நாடார் (52) கைது

பசுபதி பாண்டியன் கொலை உட்பட பல வழக்கு.. ‛கோழி’ அருள் துப்பாக்கி முனையில் கைது..

தென்காசி சுரண்டை அருகே உள்ள பங்களா சுரண்டை சேர்ந்தவர் அருள் என்ற கோழி அருள் (வயது 52). இவர் மீது கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், வெடிகுண்டு பதுக்குதல் போன்ற பல்வேறு கிரிமினல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பிட்ட சாதி அமைப்போடு தொடர்பில் இருந்த கோழி அருள், சாதிய வன்மத்தில் தென்மாவட்டங்களில் நடைபெற்ற முக்கிய கொலைகளில் குற்றவாளியாக உள்ளார். இவரை தென்காசி மாவட்ட போலீஸார் நேற்று இரவு துப்பாக்கி முனையில் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் பழைய ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள், என ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது

அதைப்போல நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளில் பிடிபடாத குற்றவாளிகள் மற்றும் வாரண்ட் நபர்களை பிடிப்பதற்கும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற அசம்பாவிதங்களை தடுப்பதற்கு அந்தந்த ஊர்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் ரோந்து செல்லும் பணியை அதிகப்படுத்தவும், காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் தங்களுடன் துப்பாக்கி வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி அனைத்து ஊர்களிலும் போலீஸ் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட வருகின்றனர். இந்தநிலையில் அருள் என்ற கோழி அருள் மீதான கிரிமினல் வழக்கு தென்காசி மாவட்டத்தில் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது. நீண்ட நாட்களாக அவர் தலைமறைவாகவே இருந்து வந்த நிலையில், அருளை பிடிப்பதற்கு போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

சாதி ரீதியிலான கொலை, தாக்குதல் உள்ளிட்டவற்றில் இவர் ஈடுபட்டதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பசுபதி பாண்டியன் கொலை வழக்கிலும் இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதோடு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லையில் கராத்தே செல்வின் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக சென்னையில் வைத்து கட்டதுரையை கொலை செய்த வழக்கு கோழி அருள், ராக்கெட் ராஜா போன்றோர் மீது உண்டு. கோழி அருள் குடும்பம் 1990களில் கோழி கடை வைத்திருந்த காரணத்தால் அவருக்கு இந்த பெயர் வந்ததாக கூறுவார்கள். ராக்கெட் போல வேகமாக தாக்குதல் நடத்தக்கூடியவர் என்று ராக்கெட் ராஜாவிற்கு அந்த அடைமொழி வந்ததை போல கோழி அருளுக்கு இந்த பெயர் ஒட்டிக்கொண்டது.

அதன்படி போலீஸார் விசாரணை நடத்தியதில், தென் மாவட்டத்தில் பிரபல ரவுடியான கோழி அருள் தனது அடையாளத்தை மறைத்து சென்னையில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ஒன்றில் லாரி ஓட்டுநராக வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு இருந்தபடியே வெளி மாநிலங்களுக்கும், வட மாநிலங்களுக்கும் சரக்குகளை டெலிவரிக்கு எடுத்துச்சென்றுள்ளார். அவ்வாறு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்குச் செல்லும்போது சரக்கு டெலிவரி செய்யும் இடத்தில் அறிமுகமாகும் நபர்களின் செல்போன் மூலமாக இங்கு இருப்பவர்களை போனில் தொடர்பு கொண்டு மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது, பணம் அனுப்பச் சொல்லி மிரட்டுவது போன்ற வேலைகளில் கோழி அருள் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகார்கள் கிடைக்கப்பெற்றதும் சம்பந்தப்பட்ட செல்போன் எண்களை ஆய்வுக்குட்படுத்தினர். அதன்படி விசாரணை நடைபெற்றதில் கோழி அருளின் தில்லுமுல்லு வேலைகள் போலீஸூக்கு தெரியவந்தது. எனவே அவரை இன்னும் தீவிரமாக கண்காணிப்பு செய்ய அறிவுரை வழங்கப்பட்டது

இந்தநிலையில் அவர் மீதான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வர உள்ளதால் சொந்த ஊரான சுரண்டைக்கு கோழி அருள் வந்தார். சென்னையில் இருந்து அவர் ஊர் திரும்பும் வழியில் மதுரையில் கூட்டாளி ஒருவரை சந்தித்து கையில் ஏதோ பார்சலையும் மறைத்து வாங்கிவந்திருந்தார். சுரண்டையில் அவரை பின்தொடர்ந்த போலீஸார் அருள் தப்பிச்செல்ல முடியாத சரியான சமயம் பார்த்து துப்பாக்கி முனையில் அவரை சுற்றிவளைத்தனர். இதையடுத்து கோழி அருள் கைது செய்யப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஊர் திரும்பும் வழியில் மதுரையில் கூட்டாளியிடம் வாங்கி வந்த பார்சலில் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளூரில் கஞ்சாவை சிறு,சிறு பொட்டலங்களாக மாற்றி விற்பனை செய்வதற்கும், இங்கிருக்கும் நபர்களுக்கு மொத்த கஞ்சா சப்ளை நபராகவும் கோழி அருள் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button