
தமிழகத்தின் எல்லை மாவட்டமான இடுக்கி மாவட்டம் கேரளாவின் மிகப்பெரிய மலை மாவட்டம் ஆகும். மிகவும் அழகான இந்த மாவட்டத்தில் ஏராளமான தமிழர்கள் வசிக்கிறார்கள்.
கிட்டத்தட்ட தேனி மாவட்டத்தின் ஒரு பகுதி என்று சொல்லும் அளவிற்கு அங்கு தமிழர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.. இடுக்கி மாவட்ட கலெக்டர் விக்னேஷ்வரி அங்கு புதிய முயற்சியை எடுத்துள்ளார். இதன்படி பேஸ்புக் வீடியோ அழைப்பு மூலம் புதன்கிழமை அன்று குறைதீர் முகாம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
இடுக்கி மாவட்ட கலெக்டராக இருக்கும் விக்னேஷ்வரி, மதுரையைச் சேர்ந்தவர் ஆவார். அங்குள்ள தியாகராஜ கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். அதன் பின்னர் ஐஏஎஸ் தேர்வுக்கு முயற்சித்து, 2015 ஆம் ஆண்டு கேரள பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார்.
கேரள சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் (கே.டி.டி.சி) நிர்வாக இயக்குநராகவும், கேரள மாநில கல்லூரி கல்வி இயக்குநராகவும், கோட்டயம் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது இடுக்கியின் மாவட்ட ஆட்சியராக உள்ளார்.
இடுக்கி மாவட்டத்தின் இரண்டாவது பெண் கலெக்டர் விக்னேஷ்வரி தான்..எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் என்எஸ்கே உமஷை திருமணம் செய்தார். விக்னேஷ்வரி ஐஏஎஸ் இடுக்கி மாவட்ட கலெக்டராக கடந்த ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். முற்றிலும் மலைப்பகுதி மாவட்டமான இடுக்கியில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார். அதேபோல் மக்கள் தன்னை எளிதாக அணுகுவதற்காக ஒவ்வொரு புதன்கிழமை அன்று மாலையில் பேஸ்புக் வீடியோ காலில் குறைகளை கேட்பதாக அறிவித்துள்ளார்
இது தொடர்பாக இடுக்கி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், “இடுக்கி மாவட்டத்தில் பேஸ்புக் வீடியோ அழைப்பு மூலம் குறைதீர்க்கும் முகாம் வாரந்தோறும் புதன்கிழமை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. அதன்படி இந்த முகாம் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. முகநூலில் கலெக்டர் விக்னேஸ்வரி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்க உள்ளார். அதற்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.