
சேலம்: போதை கும்பல் தலைவனை கடத்தி சென்ற வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என, ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனுவை சேலம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இலங்கையை சேர்ந்தவர் பிலாலுதீன். பிரபல போதை பொருள் கடத்தும் கும்பல் தலைவன். கடந்த 2002ம் ஆண்டு, சென்னையில் அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், உடல் நலம் சரியில்லை என கூறி, சேலம் மத்திய சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். பின்னர், குடல் இறக்க நோய் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி, பிலாலுதீனை, மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது.அவர்களை பிடிக்க துரத்திய போலீசாரை, துப்பாக்கியை காட்டி மிரட்டியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள காம்பவுண்ட் சுவர் வழியாக கடத்திய கும்பல், அவரை காரில் ஏற்றி தப்பி சென்றது. இதுதொடர்பாக, சேலம் அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை, திட்டம் போட்டு கடத்தி சென்று இலங்கைக்கு தப்ப வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதில், திருநெல்வேலியை சேர்ந்த பனங்காட்டு படை மக்கள் இயக்கதலைவர் ராக்கெட் ராஜா மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலியை சேர்ந்த 10 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கு, சேலம் ஜேஎம் 3 நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவர்களில் ராக்கெட் ராஜா, அந்தோணி, ராமசாமி, அருள், பாலு (எ) பாலசுப்பிரமணி ஆகியோர் மீதான வழக்கு மட்டும் கடந்த 2010ம் ஆண்டு சேலம் 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.பிலாலுதீன், ராஜன் (எ) ரசிகன், முருகன், ராஜா (எ) பரோட்டா ராஜா, சிலுவை (எ) சிலோன்காரன் தலைமறைவானதால் அவர்கள் மீதுள்ள வழக்கு மட்டும் ஜேஎம் 3 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என ராக்கெட் ராஜாவும், அருளும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவில், எப்ஐஆரில் எங்களது பெயர் இல்லை.
சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில் சேலம் வரவில்லை. திட்டமிட்டே எங்களது மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கும், தங்களுக்கும் எந்த தொடர்புமே இல்லை என தெரிவித்திருந்தனர்.இதற்கு அரசு வழக்கறிஞர் மணிகண்டன், ‘கடத்தல் சம்பவம் நடக்கும்போது குற்றம்சாட்டப்பட்டவர்களை யாரும் பார்க்கவில்லை. தொடர் விசாரணையில் ஒவ்வொருவராக கைது செய்யும்போது, யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்ற விவரம் தெரியவந்ததையடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இவர்களை விடுவிக்க கூடாது’ என்றார். மனுவை விசாரித்த நீதிபதி கலைவாணி, ராக்கெட் ராஜா, அருள் ஆகியோரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்