கோக்கு மாக்கு
Trending

அரிதாகி வரும் நீலக்குறிஞ்சி மலர்கள்

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பூக்கத் துவங்கியுள்ளன. புல்வெளி நிறைந்த மலைப்பகுதியில் பூக்கும் இந்தப் பூக்களைக் காண மக்கள் ஆர்வத்துடன் படையெடுப்பது வழக்கம். ஆனால் இந்த மலர்கள் பற்றிய தகவல்கள் பலரும் அறியாததாகவே இருக்கின்றன.


ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்த்தியானா (Strobilanthes Kunthiana) என்ற தாவரவியல் பெயர் கொண்ட நீலக்குறிஞ்சி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பதால் அரிதிலும் அரிதான ஓர் இனமாகக் கருதப்படுகிறது.
ஆசியப் பல்லுயிர்ச் சூழலைப் பற்றிய ஆய்வுகளை வெளியிட்டு வரும் இந்தோனேஷியாவின் சூழலியல் இதழான டேப்ரோபணிகா (Taprobanica, The Journal of Asian Biodiversity) இந்த நீலக்குறிஞ்சியின் தன்மைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.

நீலக்குறிஞ்சியைப் பற்றி நீண்ட காலமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றி கூறுகையில்

தமிழ்நாடு மற்றும் கேரளாவிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர்ந்த சிகரங்களில்தான் நீலக்குறிஞ்சிச் செடிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒரு முறை இதில் பூக்கும் மலர்களே இதன் தனித்துவமாகக் கருதப்படுகிறது. புல்வெளிகள் நிறைந்த மலைப்பகுதிகளில் மட்டுமே வளரும் இந்த செடிகள் குறைந்தபட்சம் அரை மீட்டரிலிருந்து ஒரு மீட்டர் வரை உயரம் கொண்டவை என்கின்றனர்.

தேனி மாவட்டம் மேகமலையிலுள்ள குறிஞ்சி மலர்ச்செடி, ஒன்றரை மீட்டர் வரை வளரும் தன்மை கொண்டது. இந்தச் செடிகள், பழங்களை விளைவித்து, அதிலிருந்து விதைகளை வெடித்துச் சிதறச் செய்தபின் மடிந்து விடுகின்றன. புல்வெளிகள் நிறைந்த மலைப்பகுதிகளில் மட்டுமே இவை வளர்வதால் தாவர உண்ணிகள் மேயும்போது, இந்தச் செடிகளையும் மேய்ந்து விடுகின்றன. கடும் வெப்பத்தால் இயற்கையாகவோ அல்லது மனிதச் செயல்களாலோ ஏற்படும் காட்டுத்தீயால் நீலக்குறிஞ்சி அழிந்துவிடுகிறது என்று தாவிரவியல்ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நீலகிரி வனக்கோட்டத்தில் மட்டுமின்றி, தென்காசியின் குற்றாலம், தேனியின் மேகமலையிலும், வெவ்வேறு வகையான குறிஞ்சி வகைகளை அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.
மேகமலையில் 500 மீட்டரிலிருந்து 900 மீட்டர் வரை உயரமுள்ள மலைப்பகுதிகளில், வேறு விதமான குறிஞ்சி பூப்பதை இவர்கள் பதிவு செய்துள்ளனர். அந்த வகைக் குறிஞ்சி, ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பதாக அங்குள்ள உள்ளூர் மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
நீலகிரி, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மலைப்பிரதேசம் என்பதால், ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இவர்களில் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் போன்ற முக்கிய நகரங்களைத் தவிர்த்து வேறு பகுதிகளிலும் ரிசார்ட்கள் மற்றும் தனியார் விடுதிகளில் பலரும் தங்குகின்றனர்.
காப்புக்காட்டுக்குள் உள்ள இந்த நீலக்குறிஞ்சி மலர்களைக் காண்பிப்பதாகக் கூறி அங்குள்ள வழிகாட்டிகள் பலரும் பல ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு வனத்துறையின் முறையான அனுமதியின்றி மலைப்பகுதிக்கு அழைத்துச் செல்கின்றனர். இதன் காரணமாகவே நீலக்குறிஞ்சி எந்தப்பகுதியில் பூத்திருப்பது என்பதைக் கூட தாங்கள் குறிப்பிட விரும்புவதில்லை என்கின்றனர் அப்பகுதியில் உள்ளவர்கள். இதையே வனத்துறையினரும் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் நீலகிரி வனக்கோட்டத்தில் ஊட்டி மற்றும் கோத்தகிரியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் 20 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையோரங்களிலும் பல இடங்களில் பூத்திருப்பதால் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்தபடி அதை ரசிக்கின்றனர் என்றார்.
மேலும் சாலையோரம் நின்று இப்பூக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அதை நாங்கள் தடுப்பதில்லை. அதேநேரம் ஆங்காங்கே வனத்துறை ஊழியர்களை நிறுத்தி செடிகளைப் பறிக்காதவாறும் உள்ளே சென்று செடிகளுக்கு சேதம் ஏற்படாத வாரும் கண்காணித்து வருகிறோம். காப்புக்காட்டுப் பகுதிக்குள் செல்ல யாரையும் அனுமதிப்பதில்லை. அங்கு யாரும் செல்ல முடியாத வகையில் தீவிரமாகக் கண்காணிக்கிறோம் என்கின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button