
தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகா என மூன்று மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது பந்திப்பூர் புலிகள் காப்பகம்.

இந்த பந்திப்பூர் புலிகள் காப்பக பகுதியின் வழியாகத்தான் கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளா செல்வோரும் , தமிழக நீலகிரி பகுதிக்கு செல்வோரும் செல்ல வேண்டும் . இப்படி முக்கிய சாலை உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பக பகுதிக்குள் செல்லும் வாகன ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளும் ஆங்காங்கு வண்டிகளை நிறுத்தி வன உயிரினங்களை வேடிக்கை பார்ப்பது , அவற்றுக்கு உணவு கொடுக்க முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு சில சுற்றுலா பயணிகள் இயற்கை உபாதைகள் கழிக்க புலிகள் , சிறத்தைகள் , யானைகள் நடமாடும் பகுதிகளில் வாகனங்களை விட்டு இறங்கி செய்கின்றனர் . இதனால் வன உயிரினங்களுக்கு தொந்தரவு ஏற்படுவது மட்டுமின்றி வாகனங்களையும் சுற்றுலா பயணிகளை தாக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதனை மறுக்க முடியாது.
நேற்றைய சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் வனப்பகுதிக்குள் நின்ற யானைக்கு உணவளிக்க முயற்சித்து யானை தாக்க முயல நூலிழையில் உயிர்தப்பினார் .
நேற்று ஒரே நாளில் மூன்று வேவ்வேறு வனக்குற்றங்கள் வன ஆர்வலர்களால் வீடியோ ஆதாரமாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மிகப்பெரிய உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்னர் உரிய கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.