
*தென்காசி அருகே குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் சடலம் – கொலையா? போலீசார் தீவிர விசாரணை.*
தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியின் அருகே உள்ள கீழவாலிபன் பொத்தை என்கின்ற பகுதியில் உள்ள ஒரு குட்டையில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற தென்காசி போலீசார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் குட்டையில் மிதந்து கொண்டிருந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது, முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த முருகைய்யா என்பது தெரியவந்துள்ள நிலையில், அவர் ஏன் தென்காசி பகுதிக்கு வருகை தந்தார் என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், நகர் பகுதிக்கு வெளியே உள்ள ஒரு குட்டையில் முருகையா சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் தவறி விழுந்து உயிரிழந்தாரா? இல்லையெனில் யாரேனும் கொலை செய்து இந்த பகுதியில் கொண்டு சென்று போட்டனரா? என்ற பல்வேறு கோணங்களில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.