
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் மேற்கு, கிழக்கு, வடக்கு ஒன்றிய வாக்குச்சாவடி இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், திமுக ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பெறுநர்கிள்ளி ஆகியோர் கலந்துகொண்டு இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு தேர்தல் குறித்தும் வாக்குச்சாவடியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடத்தினர். கூட்டம் முடிந்து சட்டமன்ற உறுப்பினரும் தொகுதி பொறுப்பாளரும் சென்ற பிறகு 3 ஒன்றிய செயலாளர்கள் மூலமாக வந்திருந்த வாக்குச்சாவடி இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் என 300க்கும் மேற்பட்டோருக்கு மதுவுடன் (பீர் பாட்டிலுடன்) கூடிய அசைவ விருந்து வைக்கப்பட்டுள்ளது.
சாப்பாட்டு மேஜையின் மீது இலையுடன் ஆளுக்கு ஒரு பீர் பாட்டில் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கும் காட்சிகள், புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.