
கண்ணகி கோயில் சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றத்தில் இரு தரப்புக்கு இடையே சர்ச்சை ஏற்பட்டது. இதனால் வனத்துறையினர் கொடியேற்றத்துக்கு அனுமதி மறுத்து அனைவரையும் வெளியேற்றினர். வெளியாட்கள் வருவதைத் தடுக்க வனத்துறை கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளது.

தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள விண்ணேற்றிப்பாறை எனும் இடத்தில் கண்ணகி கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழுநிலவு நாளன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா மே 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கண்ணகி கோயில் மலையடிவாரமான பளியன்குடியில் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.
இதற்காக மங்கலதேவி கண்ணகி கோயில் அறக்கட்டளை சார்பில் இன்று (ஏப்.29) கொடியேற்றத்துக்காக வந்திருந்தனர். அப்போது இன்னொரு பிரிவினரும் கொடியேற்றத்துக்காக வந்திருந்தனர். இதனால் கொடியேற்றுவதில் இருதரப்பினர் இடையே சர்ச்சை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கூடலூர் வனச்சரகர் முரளீதரன் காவல் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து, உத்தமபாளையம் வட்டாட்சியர் கண்ணன், உதவிகாவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஒருமணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இருதரப்பினருமே கொடியேற்ற வேண்டும் என்று கூறியதால் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பளியன்குடியில் உள்ள வனப்பாதை இரும்பு கதவுகள் பூட்டப்பட்டன.
வெளியாட்கள் இங்குவர தடை விதிக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் கம்பத்தில் உள்ள தங்கள் அலுவலகத்துக்குச் சென்று கொடியேற்றினர். இதற்காக பச்சை மூங்கிலில் கண்ணகியின் உருவம் பொறித்த மஞ்சள் கொடி ஏற்றப்பட்டது. மங்கள வாத்தியங்கள் முழங்க பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. பின்பு பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தைத் தொடங்கினர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. இதனால் சில பிரிவினர் கொடியேற்றம், அன்னதானம் உள்ளிட்டவற்றை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். இருப்பினும் கொடியேற்றத்தில் இருதரப்பிலும் சர்ச்சை ஏற்பட்டது. ஆகவே பிரச்சினை ஏற்படும் என்று கருதி பளியன்குடி கொடியேற்றத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும்,” என்றனர்.
இதுவரை பாரம்பரியமாக பளியன்குடியில் மலைவாழ் மக்களை ஒருங்கிணைத்து கொடியேற்றம் நடைபெற்று வந்தது. தற்போது அங்கு இந்நிகழ்ச்சி நடைபெறாததால் பக்தர்கள் வருத்தம் அடைந்தனர்.