
நீட் தேர்வு சமத்துவம் ஏற்படுத்தியுள்ளது; திமுக அரசியல் செய்கிறது – கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
நெல்லையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், டிசம்பர் மாதம் புதிய தமிழகம் கட்சி சார்பாக மாநில மாநாடு நடைபெற உள்ளதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் ரீதியான மாநாடாக இது இருக்கும் என்றும், ஆட்சியில் பங்கு அரசியல் பங்கு என்ற கொள்கை முழக்கத்தோடு இந்த மாநாடு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வு குறித்து அவர் கூறியதாவது: “நீட் தேர்வு வந்த பிறகுதான் ஏழை எளிய குழந்தைகள் பணம் இல்லாமல் மருத்துவர் ஆகிறார்கள். 2015-16க்கு முன்பு ஒரு கோடி, ஒன்றரை கோடி செலுத்தி வசதி படைத்தவர்கள் மட்டுமே மருத்துவர்கள் ஆனார்கள்.
தரத்தின் அடிப்படையில் கிடைக்காத நிலையில் பணம் கொடுத்து மருத்துவர்கள் ஆனார்கள். சுதந்திர இந்தியாவில் நீட் தேர்வு மூலம் ஒரு சமத்துவம் நிலவத் துவங்கியுள்ளது. கடந்தாண்டு அதற்கு முந்திய ஆண்டுகளில் சில குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. வினாத்தாள் கசிவு, காப்பி புகார்கள் வந்தன. நீட் தேர்வு நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். அதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டும். அதை குறையாக பார்க்கக் கூடாது.
அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் வந்த காரணத்தால் காப்பி எடுப்பதை தடுப்பதற்காக இவ்வளவு கட்டுப்பாடுகள் சோதனைகள் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டு மாணவ மாணவியரை குறி வைத்து செய்வதாக கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. கர்நாடகாவில் கூட பிராமண மாணவரின் பூணூல் அகற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வை வைத்து திமுக அதை சார்ந்தவர்களும் அரசியல் செய்ய பார்க்கிறார்கள். நீட் தேர்வு நேர்மையாக நடப்பது பிடிக்கவில்லை. ஆகையால் ஏதேனும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்கள். 2021 சட்டமன்றத்தில் வந்தவுடன் கையெழுத்து போடுவேன் என்று கூறினார்கள். ரகசியம் இருக்கிறது. ரகசியத்தை உடைத்து கையெழுத்து போட்டு இருந்தால் இந்த பிரச்சனை இருந்திருக்காது. அவர்கள் மீது உள்ள பழியை வேற எப்படியாவது திருப்புவதற்காக இந்த பிரச்சாரம் செய்கிறார்கள்.”டாக்டர் கிருஷ்ணசாமியின் இந்த கருத்துக்கள், நீட் தேர்வு குறித்து தமிழக அரசியலில் மீண்டும் ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளது.