கோக்கு மாக்கு
Trending

வனச்சட்டத்தால் பாதுகாக்கப்பட்டுள்ள மரங்களை வெட்டி சாய்த்த கும்பல்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் தான் இந்த சம்பவமும் நடந்துள்ளது.

சிறுமலை வனசரக மற்றும் சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்ட அகஸ்தியர்புரம் மலை கிராமத்திற்கு அடுத்து உள்ள காப்பிளிய கணவாய் அல்லது விடுதலை புலிகள் பள்ளம் என்ற இடத்திற்கு செல்வதற்கு ஆலமரத்து ரோடு என்ற நடைபாதை வழி உள்ளது. இது முழுக்க முழுக்க வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடம்

அந்த பகுதியில் உள்ள பட்டா நிலங்களை மொத்தமாக வாங்கிய கரூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பட்டா நிலம் முழுவதையும் சென்ட் கணக்கில் பிரித்து (21-சென்ட் அளவிற்கு மேல் விற்பனை செய்தால் DTCP அனுமதி வேண்டியதில்லை விவசாய நிலமாகவே பத்திர பதிலில் கணக்கு காட்டப்படும்) விற்பனை செய்ய தயார் நிலையில் வைத்துள்ளனர்.

இதற்காக நடைபாதை வழி பாதையாக இருந்த ஆலமரத்து ரோடு இப்பகுதிக்குள் பளியர்கள் என்னும் மலைவாழ் பழங்குடியினர் குடியிருப்பு பகுதி உள்ளதாக கணக்கு காட்டப்பட்டு தார் சாலையாக வனப்பகுதி வழியாக உருமாறியது. இந்த வனப் பகுதியில் பல்வேறு வகையான வனச்சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட மரங்கள் உள்ளன.

இந்த பகுதியில் கடந்த சில வாரங்களாக யாரோ எந்த வித அனுமதியும் பெறாமல் வேங்கை , வெக்காலி , குமிழ் உட்பட 20க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான வன சட்டத்திற்கு உட்பட்ட மரங்களை வெட்டி இரும்பு சட்டங்களை பொருத்தி வருகின்றனர். இதற்காக பெரிய ஜனரேட்டர் ஒன்றும் அந்த இடத்தில் வைத்துள்ளனர். மேலும் ஆங்கிள்கள் , தகர சீட்டுகள் , தண்ணீர் டிரம்கள் வைத்துள்ளனர்.

இந்த இடத்திற்கு தற்போது தற்காலிக மின் இணைப்பும் TNEB -ல் பெற்றுள்ளனர். இந்த பொருட்களை உள்ளே கொண்டு வர இடைஞ்சலாக இருந்த மரங்களை மெயின் ரோட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர்.

வெட்டப்பட்ட மரத்துண்டுகள் மற்றும் கிளைகள் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது . இந்த வேலை நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே பாறைகளை உடைத்து மறைவாக குவித்து வைத்துள்ளனர்.

இது குறித்து சம்பந்தபட்ட வனத்துறை அதிகாரிகளிடம் கேட்கலாம் என்றால் ஏற்கனவே இதே போன்று நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக கேட்ட போது வனத்துறையினர் கூறியதாவது – பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களில் நடக்கும் இது போன்ற சம்பவங்கள் வருவாய் துறையினர் தான் பார்க்க வேண்டும் என்றும் யாரிடமும் எதற்காகவும் வளைந்து கொடுக்காமல் மிகவும் நேர்மையாகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வதாகவும் தங்களை தாங்களே புகழ்ந்து தள்ளுகின்றனர்.

பைல் படம் (ஆலமரத்து ரோடு )

இவர்களிடம் கேட்பதற்கு கேட்காமல் இருந்து விடலாம் என்ற மன நிலைக்கு நம்மை ஆளாக்கி விடும் அளவிற்கு இவர்களது பேச்சு இருக்கும் .

தற்போது சம்பவம் நடைபெற்றுள்ள இடம் பட்டா இடமா அல்லது நேர்மையான அதிகாரிகள் என தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் வனத்துறையின் கண்காணிப்பின் கீழ் உள்ள வன நிலமா என்பதனை அறிய முடியவில்லை . எப்படியோ ஏதோ ஒரு துறை அது வனத்துறையோ அல்லது வருவாய் துறையோ உரிய அனுமதி இன்றி நடைபெற்று வரும் இந்த பணி தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் சரி

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button