
வவ்வால் இனங்களில் மிகவும் பெரியதும் அதிக எடையுடன் (அதிகபட்சமாக 1.6 கிலோ வரை ) கூடிய இனமாக இந்த இந்திய பறக்கும் நரி என்கின்ற INDIAN FLYING FOX ( Scientific Name:- Pteropus giganteus ) இனம் உள்ளது . இது சர்வதேச அளவில் வன உயிரினங்களுக்கான அமைப்பான IUCN பட்டியல் இரண்டில் உள்ளதுடன் மிகவும் அரிய வகை இனம் என குறியீடு வைத்துள்ளது . இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டம் – 1972 -ன் புதிய திருத்தம் – 2022-ன் படி பாதுகாப்பு பட்டியல் – 2 -ல் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த இன வவ்வால் ஒன்று திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மலை பகுதியில் அகஸ்தியர் புரம் அடுத்து உள்ள தண்ணி பாறை மேடு அருகே இன்று காலை முதல் TNEB – க்கு சொந்தமான மின்சார கம்பத்தில் தொங்கிய நிலையில் இருந்தது . மதியம் வேலை முடிந்து அந்த வழியாக TN-57 – CA – 8816 என்ற எண் கொண்ட பல்சர் பைக்கில் வந்த சிறுமலை பழையூர் பகுதியை சேர்ந்த இருவர் கீழே கடந்த மரக்கட்டைகளை கொண்டு தாக்கி கொன்று எடுத்து செல்ல முயன்றனர்.


அப்போது அந்த வழியாக வந்த மதுரை மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் காவலர் ஒருவர் இவர்களை நிறுத்தி விசாரிக்க முற்பட்ட போது அவரை பல்சர் வாகனத்தை கொண்டு காவலரை இடித்து தள்ளிவிட முயன்று தப்பி சென்றுவிட்டனர். இதை காவலருடன் வந்த நபர்கள் புகைப்படம் எடுத்ததுடன் வனத்துறையின் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் குறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில் சிறுமலை மலைபகுதியின் வனச் சாலையில் சர்வ சாதாரணமாக வன உயிரினத்தை கொன்று எடுத்துச் செல்லும் நிலையில் சிறுமலை மலை பகுதியில் வன உயிரின வேட்டை சர்வ சாதரணமாக நடைபெற்று வருகிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவத்தையே உதாரணமாக கூறலாம் என்கின்றனர்.