
திருநெல்வேலி மாவட்டத்தில் மோதலை தடுக்க சென்ற உதவி ஆய்வாளர் 17 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்துள்ள பாப்பாகுடியில நேற்று இரவு இரு நபர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தகவல் கிடைத்த போலீசார், பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையில்
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மோதலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், போலீசாரை பார்த்ததும் ஆத்திரத்தில் அருகே கிடந்த அரிவாளை எடுத்துக்கொண்டு அவர்களை நோக்கி வெட்ட பாய்ந்ததாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த போலீசார் உடனடியாக அருகே உள்ள வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டனர்.ஆனாலும் ஆத்திரம் அடங்காத சிறுவன் அரிவாளால் தொடர்ந்து வெட்டியதில் கதவு இரண்டாக உடைந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வீட்டிற்குள் பதுங்கி இருந்த போலீசார் உட்பட நான்கு பேரையும் சிறுவன் வெட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் சுதாரித்த காவல் உதவி ஆய்வாளர் முருகன் உடனடியாக தற்காப்புக்காக சிறுவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார்.
இதில் துப்பாக்கி குண்டானது சிறுவனின் வயிற்றை கிழித்துச் சென்றதால் சிறுவன் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சேரன்மகாதேவி டிஎஸ்பி சோமசுந்தரம் தலைமையில் காயமடைந்த சிறுவனை பிடித்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர்.
காயம் அடைந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது
சிறுவன் மீது ஏற்கனவே வெடிகுண்டு வீசிய வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மோதலை தடுக்க சென்ற போலீசார் மீது அரிவாளால் வெட்ட சென்ற 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது