
உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட மாரிமுத்து என்பவர் தூக்கிட்டு தற்கொலை.!
இச்சம்பவம் உடுமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக கேரள எல்லைப் பகுதியான மேல் குருமலையை சேர்ந்தவர் மாரிமுத்து (45) இவர் நேற்று இரவு சிறுத்தையின் பல் கடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் மாரிமுத்துவை கைது செய்து விசாரணைக்காக உடுமலை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். வனத்துறை அலுவலகத்தில் மாரிமுத்துவிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதன் பிறகு விசாரணை செய்த அதிகாரிகள் சென்ற பிறகு அங்குள்ள வனத்துறை காவலரிடம் கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மாரிமுத்து, கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் உடுமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், வருவாய் கோட்டாட்சியர் குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது இதுசம்பந்தமாக செய்தியாளர்கள் தரப்பிலும் , சமூக ஆர்வலர்கள் தரப்பிலும், உறவினர்கள் தரப்பிலும் கேட்கப்படும் கேள்விகள் என்னவென்றால்? விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட மாரிமுத்துவை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் வனத்துறை அலுவலகத்தில் வைத்திருந்தது ஏன்?
ஒருநாள் முழுவதும் வனத்துறை அலுவலகத்தில் மாரிமுத்து எதற்காக வைக்கப்பட்டிருந்தார்.? என மாரிமுத்து உறுப்பினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிறுத்தை பல் வைத்திருப்பதாக இரவு 12:45 மணிக்கு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு நேரில் சென்ற வனத்துறையினர் மாரிமுத்து என்பவரை கைது செய்து விசாரணைக்காக உடுமலைப்பேட்டைக்கு அழைத்து வந்துள்ளனர்.
மாரிமுத்து உண்மையாகவே சிறுத்தை பல் வைத்திருந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக கைது செய்தனரா? மாரிமுத்து சிறுத்தை பல் வைத்திருந்ததை உறுதிபடுத்திய வனத்தறை அதிகாரி யார்? என மாரிமுத்து உறவினர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கின்றனர்.
இதற்கு முன்னர் நடைபெற்ற இதே போன்ற சம்பவங்கள்

- கடந்த சில நாட்களுக்கு முன்னர் சத்தியமங்கலம் பவானிசாகர் வனச்சரகத்தில் தாண்டாம் பாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (வயது – 48) மான்கறியுடன் பிடிபட்டு விசாரணையின் போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

2. அதே போல தர்மபுரி மாவட்டம் , ஏமனூர் காப்பு காட்டில் யானையை வேட்டையாடிய வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட கொங்காரபட்டி பகுதியை சேர்ந்த செந்தில் (வயது – 31 ) மர்மமான முறையில் வனப்பகுதியில் இறந்து கிடந்தார்.

3. கடந்த 2023-ம் ஆண்டு தேனி மாவட்டம் சுருளி மின் நிலையம் அருகே வேட்டையாடிய நபரை பிடிக்க முயன்றபோது வனத்துறையினரை தாக்கியதாக கூறி சுட்டுக் கொல்லப்பட்ட குள்ளப்ப கவுண்டன் பட்டி பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது – 55 ) . வனத்துறையினருடன் நல்ல தொடர்பில் இருந்த நிலையிலும் என்கவுண்டர் செய்யப்பட்டது அப்போது பெரும் சர்ச்சை ஆனது.
இவற்றையெல்லாம் தொடர்புபடுத்தி பார்த்தால் வனத்துறையினர் யாரையோ காப்பாற்ற அப்பாவிகளை பிடித்து வழக்குபதிவு செய்து உயிரிழப்பு ஏற்படும் வகையில் விசாரணை என்கின்ற பெயரில் சாகவிட்டு வழக்கை முடித்து வருகின்றனர் என்று குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது