
திருப்பத்தூர் அருகே பள்ளி வளாகத்தில் மூடியிருந்த கிணற்றில் விழுந்த மாணவனின் உடலை வாங்க பெற்றோர் ஒப்புதல் தெரிவித்தனர். மாணவன் இறந்ததால் பள்ளிக்கு இரண்டாவது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் முகிலன், திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி பதினோறாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவன் கடந்த ஒன்றாம் காணாமல் போனதாக பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் கூறிய நிலையில் அதிர்ந்து போன பெற்றோர்கள் மகனை காணவில்லை என திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கடந்த இரண்டு நாட்களாக தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று பள்ளி வளாகத்தில் உள்ள மூடப்பட்டிருந்த கிணற்றில் மாணவன் உடல் கண்டெடுக்கப்பட்டது.
மூடிய கிணற்றினுள் மாணவன் உடல் இருந்ததால் மரணத்தில் சந்தேகப்பட்ட பெற்றோர் பள்ளி நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டினர். தங்கள் மகனின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகமே காரணம் என்பதால் பள்ளியின் பாதிரியாரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருப்பத்தூர் நகர காவல் நிலையம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மாணவன் முகிலனுடைய உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவனின் உடலை வாங்க மறுத்த பெற்றோர், மரணத்துக்கு நீதி கேட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி, மாணவன் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பாதிரியார் ஜோசு மாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த சூழலில் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு மாணவனின் உடலை வாங்க பெற்றோர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அசம்பாவிதங்களை தடுக்க நேற்றும், இன்றும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.