
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித் போலீஸ் பாதுகாப்போடு ஆணவத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்துள்ளார்.
நெல்லை அருகே காதல் விவகாரத்தில் கவின் என்ற இளைஞர் கடந்த 27ம் தேதி பாளையங்கோட்டையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் கவினை வெட்டிய சுர்ஜித் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். கைதான சுர்ஜித் உதவி ஆய்வாளர் சரவணனின் மகன் என்பது தெரிய வந்தது. தன் சகோதரியை காதலித்த கவின் வேறு சாதி என்பதால் அவரை சுர்ஜித் வெட்டி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் சுர்ஜித்தை கைது செய்த போலீசார், அவரது தந்தை சரவணனையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில் கைதாகியுள்ள சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க முடிவெடுத்தனர்.
இதற்கிடையே கவின் வழக்கு நெல்லை இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுர்ஜித்தும், அவரது தந்தை சரவணனும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். நீதிமன்றத்திற்குள் செல்லும்போது முகத்தை துணியால் மூடிக் கொண்டு குனிந்தபடியே பவ்யமாக நடந்து சென்ற சுர்ஜித் நீதிமன்ற வளாகத்திற்குள் சென்ற உடன் தான் முகத்தில் மூடி இருந்த துணியை எடுத்துவிட்டு , தான் ஏதோ உலக சாதனையை படைத்தது போல கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லாமல் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு விசாரணைக்கு ஆஜரானார்.