செய்திகள்

யாருமே வரல – மாணவன் உடலை எரித்த போலீஸ்?

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள சி.எம்.எஸ். தங்கும் விடுதியில் தங்கிப் படித்து வந்த 13 வயது மாணவன் ஒருவன், 25 நாட்களுக்கு முன்பு விடுதி வளாகத்தில் உள்ள கிணற்றில் மூழ்கி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை நாளில் விடுதி அருகே உள்ள கிணற்றில் துணிகளை துவைத்து உலர்த்தச் சென்றபோது இந்த துயரம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த மாறாந்தை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் சேர்மதுரை (13). இவர் வள்ளியூரில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி  விடுதியிலேயே தங்கிப் படித்து வந்த சேர்மதுரை, விடுதி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

சம்பவம் நடந்த அன்று திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்பதால், சேர்மதுரை தனது துணிகளைத் துவைத்து உலர்த்துவதற்காக விடுதி வளாகம் அருகில் உள்ள கிணற்றுப் பகுதிக்குச் சென்றுள்ளார்.  கிணறு இரும்புக் கம்பி வேலியால் மூடப்பட்டிருந்தது. மேலும், கிணற்றின் மேல் இருந்த சிமெண்ட் ஸ்லாப்புகளும் மிகவும் பழமையானதாகவும் சேதமடைந்த நிலையிலும் இருந்துள்ளன.

துணிகளை உலர்த்தச் சென்றபோது, எதிர்பாராத விதமாக சேர்மதுரை அந்தச் சேதமடைந்த சிமெண்ட் ஸ்லாப்புகள் வழியாகக் கிணற்றுக்குள் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. மாணவன் கிணற்றில் மூழ்கியதை அறிந்ததும், உடனடியாக ராதாபுரம் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், சுமார் 80 அடி ஆழம் கொண்ட அந்தக் கிணற்றுக்குள் கயிறு கட்டி வலையுடன் இறங்கினர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, சேர்மதுரை கிணற்றுக்குள் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். பின்னர், மாணவனின் உடல் ராதாபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் மாலை 4 மணியளவில் நிகழ்ந்துள்ளது. விடுதி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து நடந்ததாக பெற்றோர் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்

இந்த நிலையில் கிணற்றில் விழுந்து இறந்த மாணவன் உடலை 25 நாட்களாக அவனது பெற்றோர்கள் வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நெல்லை சிந்துபந்துறை மின் மயானத்தில் இறந்த சிறுவனது உடலை காவல்துறையினரே எரித்து விட்டதாக தகவல் அறிந்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button