
பொதுவாக மரம் வெட்ட அனுமதி வரிசை எண் கன அடி அளவுகள் , மரத்தின் இனம் என குறிப்பிட்டு அனுமதி வழங்கப்படும்.
ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் மலை தேக்கு , பலஜாதி மரம் , காட்டுமரம் என பொத்தாம் பொதுவாக பெயர் வைத்து அனுமதி வழங்குகின்றனர்.

இதை பயன்படுத்தி சிறுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட மலையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மர வியாபாரிகள் மரங்களை வெட்டி அவற்றை அகஸ்தியர்புரம் வெள்ளிமலை அடிவார வனப்பகுதியில் JCB வைத்து சுத்தப்படுத்தி அங்கு குவித்து பின்னர் அங்கிருந்து லாரிகளில் ஏற்றுகின்றனர். அவ்வாறு குவிக்கப்படும் எந்த மரத்துண்டிலும் log நம்பர் இருப்பதில்லை.

பின்னர் மாலை 5 மணிக்கு மேல் சிறுமலை சோதனை சாவடியை கடந்து லாரிகளை மறைவாக நிறுத்தி வைத்து விடுகின்றனர்.

இரவு 10 மணிக்கு மேல் திண்டுக்கல் நகர் பகுதியை கடந்து மர அறுவை மில்லில் வெட்டப்பட்ட மரத்துண்டுகளை இறக்கி விடுகின்றனர்.

மரம் வெட்ட வகுக்கப்பட்டுள்ள விதிகளின் படி மரம் அடையாளம் இடப்படுவது முதல் லாரிகளில் ஏற்றி செல்வது வரை முழுக்க முழுக்க வனம் மற்றும் வருவாய் துறை கண்காணிப்பு இருக்க வேண்டும் என்றும் மரம் வெட்ட தனி அனுமதி பெறவேண்டும் என்றும் வெட்டிய மரத்துண்டுகளை இடமாற்றம் செய்ய தனி அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் சிறுமலையில் மரங்களை வெட்டும் மர வியபாரிகள் சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் இல்லாமல் தன்னிச்சையாக வெட்டி அவற்றை போக்குவரத்து அனுமதி பெறாமல் அதுவும் வனப்பகுதிக்குள் குவித்து அங்கிருந்து லாரிகளில் ஏற்றுகின்றனர்.

சோதனை சாவடியை கடக்கும் போது வெள்ளை காகிதத்தில் எழுதபட்ட log நம்பர் லிஸ்ட் வனவர் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரையுடன் (மரம் வெட்டப்படும் போது அங்கு இல்லாத வனக்காப்பாளர் மற்றும் லாரியில் ஏற்றும் போது உடன் இருக்காத வனவர் ஆகியோரது கையெழுத்துடன் log list )சோதனை சாவடி சோதனை நிறைவடைகிறது.

இது போன்று பல ஆண்டுகளாக நூதன மர கடத்தல் சிறுமலையில் நடைபெற்று வந்தாலும் பல புகார்கள் மற்றும் செய்திகள் வெளியானாலும் எந்த உயரதிகாரியும் கண்டுகொள்ள தயராக இல்லை என்றும் வன ஆர்வலர்களும் உள்ளூர் பொதுமக்களும் மாநில மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு அமைப்புகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்