
file picture
ராமநாதபுரம்:
தமிழகத்தில் கடல் அட்டைகள் மற்றும் இதர கடல் உயிரின கடத்தலில் ஈடுபட்டு கைது செய்ததாக நூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் இதுவரை தண்டனை வழங்காததால், கடத்தல் தொழிலுக்கு புதிய நபர்கள் ஆர்வம்காட்டுகின்றனர்.கடல் அட்டைக்கு மருத்துவ குணம் உள்ளதாக நம்பபடுவதால் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது .

file picture
கடல் அட்டையை இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தும் ஏஜன்டுகள் அதிகரித்து வருகின்றனர். இலங்கை வரை கடல்அட்டையை கடத்தினாலே இங்குள்ள கடத்தல் கும்பலுக்கு பெரிய அளவில் பணம் கிடைக்கிறது. ஆயுதம், போதை பொருள் உள்ளிட்ட மற்ற பொருட்களை கடத்தும் போது பிடிபட்டால் அவர்கள் எளிதில் வெளியே வரமுடியாத வகையில் சிறை தண்டனை வழங்கப்படுகிறது.

file picture
இதனால் கடல் அட்டை , கடல் குதிரை போன்ற கடல் உயிரின கடத்தலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் இந்த கடல் உயிரின கடத்தலில் முதலீடும் குறைவு . அதே போல கடல் உயிரின கடத்தலில் பிடிபடுவோர் அதிக பட்சம் 10 தினங்களுக்குள் வெளியே வருவது மட்டுமில்லாமல் அவர்கள் மீதான வழக்குகளும் அப்படியே கிடப்பில்போடப்படுகிறது. இதுபோல் நூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையின்றி கிடப்பில் உள்ளதால் இதுவரை கடல் அட்டை கடத்தியவர்கள் மீது பெரும் தண்டனையாக ஏதும் வழங்கப்படவில்லை. இதனால், புதிய நபர்களும் மற்ற கடத்தல் கும்பல்களும் தற்போது கடல் உயிரின கடத்தலில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டும் நிலை உருவாகியுள்ளது.

file picture
டன் கணக்கில் கடல் அட்டை போன்ற கடல் உயிரினங்களை கடத்துபவர்களை, ராமேஸ்வரம், வேதாளை , தொண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மெரைன் போலீசார், இந்திய கடற்படையினர் பிடித்து வனத்துறையில் ஒப்படைக்கும் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் எளிதாக வெளியே வந்து விடுகின்றனர்.

file picture
இதுகுறித்து சம்பந்தபட்ட துறையை சேர்ந்தவர்கள் கூறுகையில், கடல்அட்டை உட்பட கடல் உயிரின கடத்தலில் ஈடுபட்டதாக இதுவரை நூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சுமார் 10 ஆண்டுகளாக வழக்குகள் விசாரணையின்றி கிடப்பில் போடப்பட்டு இருப்பது கடத்தல்காரர்களுக்கு சாதகமாக உள்ளது என்றும் இதற்கென தனி அதிகாரிகளை பொறுப்பு அதிகாரியாக நியமித்து அனைத்து வழக்குகளையும் விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுக் கொடுத்தால் மட்டுமே கடல் உயிரின கடத்தல் கட்டுக்குள் வரும் என்றும் கூறுகின்றனர்.

file picture
இந்த சூழ்நிலையில் அவ்வபோது வெறும் 10 கிலோ, 20 கிலோ என்று கடல் அட்டைகள் கைப்பற்றப்படுகிறது. ஆனால் சமீபத்திய எந்த வழக்கிலும் கடத்தல் கும்பலை சேர்ந்த யாரும் கைது செய்யப்படவதில்லை என்றும் வெறும் வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டு அதோடு வழக்கு கிடப்பில் போடப்பட்டு விடுவதாகவும் கூறப்படுகிறது.

இத்தனைக்கும் வனத்துறையின் பல்வேறு பிரிவுகள் , காவல்துறையின் பல்வேறு பிரிவுகள் மத்திய மாநில அரசுகளின் அனைத்து அமலாக்க துறையின் படை பிரிவுகளும் செயல்பாட்டில் இருந்து வரும் இந்த கடலோர மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கடல் உயிரின கடத்தலை தடுக்கும் பொருட்டு அதி தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே அரிய வகை கடல் உயிரினங்களை காப்பற்ற முடியும் என வன ஆர்வலர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.