நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், கோத்தகிரி-1 கிராமம், ராம்சந்த் முதல் தாந்தநாடு வரை செல்லும் சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, கடந்த 08.08.2025 அன்று அதிகாலை இறந்து கிடந்த முள்ளம்பன்றியின் உடலை, வனத்துறையினர் மீட்க செல்லும் முன், அடையாளம் தெரியாத ஒருவர் எடுத்துச் சென்று விட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கோத்தகிரி வனத்துறையினரால் தொடர் புலன் விசாரணை மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்து வரப்பட்டது.
அவ்வாறு ஆய்வு செய்ததில், ஒரு நபர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்த நிலையில், அடிபட்டு இறந்து கிடந்த முள்ளம்பன்றியை எடுத்துச் செல்வது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அந்த நபர், கோத்தகிரி அருகில் உள்ள தாந்தநாடு பகுதியில் வசித்து வரும் பிராஜ் தாபா மகன் ராஜு தாபா (வயது சுமார் 32) என்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்ததில், அவர் கடைகளுக்கு காளான் விற்பனை செய்து வருவதும், சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த முள்ளம்பன்றியை, காளான் கம்பெனி நடத்திவரும் கோத்தகிரி வட்டம், ஓரசோலை பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு கொடுத்துள்ளதும், மேற்கண்ட ராஜு தாபாவின் மைத்துனரும் தள்ளு வண்டி கடையில் வேலை செய்து வருபவருமான ஜோசப் என்பவர் அந்த முள்ளம்பன்றியை வெட்டி, சுத்தம் செய்து கொடுத்து, சமைத்தபின் முள்ளம்பன்றி கறி சாப்பிட்டதும் தெரியவந்தது. எனவே இக்குற்றத்தில் தொடர்புடைய மேற்கண்ட மூவர் மீதும், கோத்தகிரி வனத்துறையினரால் வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் 12.08.2025 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராஜு தாபா மற்றும் ஜோசப் ஆகிய இருவரும் வட இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த பல வருடங்களாக கோத்தகிரி பகுதியில் குடியிருந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரையும் இன்று 13.08.2025 ஆம் தேதி, கோத்தகிரி குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்கள் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து எதிரிகள் இருவரையும், குன்னூர் கிளைச்சறையில், காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தப்பி தலைமறைவாகியுள்ள காளான் கம்பெனி நடத்திவரும் மகேந்திரன் என்பவரைத் தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.