கோக்கு மாக்கு
Trending

“மது மான் கறியுடன் விருந்து… ரியல் எஸ்டேட் அதிபருக்கு வலை வீசிய வனத்துறை!”

தூத்துக்குடி மாவட்டம் குருமலை வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான புள்ளி மான்கள் வாழ்கின்றன. தண்ணீர் தேடி இவை அடிக்கடி வனப்பகுதியை விட்டு அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் வயல்களுக்கு செல்வது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில், குருமலையைச் சுற்றியுள்ள கடம்பூர், கயத்தாறு பகுதிகளில் சிலர் வேட்டை நாய்களைப் பயன்படுத்தி முயல்கள், மான்கள், மயில்கள் போன்றவற்றை வேட்டையாடி சமைத்து விருந்து நடத்தி வருவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், மாவட்ட வன அலுவலர் ரேவதி ராமன், கோவில்பட்டி வனச்சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வனவர் பிரசன்னா தலைமையில் வனத்துறையினர் கடந்த சில நாட்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது, கடம்பூர் அருகிலுள்ள கொத்தாளி கிராமத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் முத்துப்பாண்டியின் தோட்டத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மான் கறி, முயல் கறி, மயில் கறி, காடை உள்ளிட்ட பல்வேறு அசைவ உணவுகளும், மதுவிருந்தும் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.

அதன்படி, ஆகஸ்ட் 17 இரவு வனத்துறை அதிகாரிகள் தோட்டத்துக்குள் நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது, புள்ளி மானின் நான்கு கால்கள் கைப்பற்றப்பட்டன. மது போதையில் உறங்கிக் கொண்டிருந்த முத்துப்பாண்டியை எழுப்பி விசாரணை நடத்தியபோது, அவர் முதலில் “நாய் கடித்து செத்த மானைதான் சமைத்தேன்” எனக் கூறினார். ஆனால் தொடர்ந்து விசாரணையில், வேட்டை நாய்களை பயன்படுத்தி மான்களை வேட்டையாடி, தொழில் பங்குதாரர்களுக்கு விருந்தளித்து வந்தது அம்பலமானது.

இதையடுத்து, பன்னீர்குளம் முத்துப்பாண்டி கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவருக்கு துணைபுரிந்த திருநெல்வேலி மாவட்டம் குறிச்சிகுளத்தைச் சேர்ந்த சுடலைமணி என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

முத்துப்பாண்டி, தனது வணிக கூட்டாளிகளுக்கும் பங்குதாரர்களுக்கும் மது விருந்து மற்றும் மான் கறி விருந்துகளை வழங்கி, சிக்கலான ஒப்பந்தங்களை எளிதில் முடித்து வந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button