
திண்டுக்கல்: கொடைக்கானல் வனப்பகுதியில், சுமார் 50 வயதாகும் பெண் யானை உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்தது. இதனால், அதன் குட்டி தாயைச் சுற்றி வந்து பிளிறியபடி பாசத்தை வெளிப்படுத்தியது கண்ணீரை வரவைத்தது.
கோம்பை வனப்பகுதியில் வியாழக்கிழமை (ஆக. 21) மாலை இந்த சம்பவம் நடந்தது. உடல்நிலை சரியில்லாமல் தரையில் விழுந்த தாயை எழுப்ப குட்டி நீண்ட நேரம் தும்பிக்கையால் தட்டி முயற்சி செய்தது. தாயின் நிலையைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தது.
வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, பட்டாசு வெடித்து, சத்தம் எழுப்பி குட்டியை அப்பகுதியிலிருந்து வனத்திற்குள் விரட்டினர். பின்னர், மயங்கியிருந்த யானைக்கு கால்நடை மருத்துவர்கள் கிரேன் உதவியுடன் எழுப்பி, குளுக்கோஸ், ஊட்டச்சத்து மருந்துகள், பழங்கள் போன்றவற்றை அளித்து சிகிச்சை செய்தனர்.
சிகிச்சை நடந்தபோது கூட குட்டி யானை தூரத்தில் இருந்து தாயைச் சுற்றி பிளிறியபடி இருந்தது. தாயை விட்டு பிரிய முடியாமல் காட்டிய பாசப் போராட்டம் அனைவரையும் உலுக்கியது.
இறுதியில், மற்றொரு யானைக் கூட்டத்துடன் குட்டி இணைந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளது.