
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பொய்கைமேடு கிராமத்தில், வயல் வெளிகளில் பல மின்கம்பங்கள் சேதமடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன. இதில் இரண்டு மின்கம்பகள் முற்றிலும் சேதமடைந்து மக்கள் நடமாட்டப் பகுதியில் அபாயமாக நிற்கின்றன.
கிராம மக்கள், “பலத்த காற்று வீசினால் எப்போது வேண்டுமானாலும் கம்பங்கள் தரையில் விழுந்து மின்சாரம் பாதிப்பு ஏற்படலாம். உயிரிழப்புகள் கூட ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது” என அச்சம் தெரிவிக்கின்றனர்.
பொய்கைமேடு மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். மின்சார பாசனமே அவர்களின் பயிர்களுக்கு உயிர். ஆனால், மின்கம்பங்கள் விழுந்துவிடுமோ என்ற அச்சத்தால் விவசாயிகள் வயலுக்குச் செல்ல கூட தயங்குகிறார்கள்.
மின்கம்பங்கள் உடைந்து விழுந்தால் பாசன வசதி முற்றிலும் பாதிக்கப்படும் . அதன் காரணமாக பயிர்கள் காய்ந்து அழியும் அபாயம் உள்ளது. மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில், உடனடியாக மின்கம்பங்கள் மாற்றி அமைக்காவிட்டால் எஙகள் உழைப்பெல்லாம் வீணாகிவிடும் என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, புதிய மின்கம்பங்களை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். விடுத்துள்ளனர்.