
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் அவ்வப்போது வனவிலங்குகளானது புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது என்பது தொடர் கதையாகி வரும் நிலையில், விவசாய நிலங்களை சுற்றி சோலார் மின் வேலிகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டாலும், சில நேரங்களில் அதையும் தாண்டி காட்டு யானை கூட்டங்களானது விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை அழிப்பது தொடர் கதையாகி உள்ளது
இதன் தொடர்ச்சியாக, கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், பகல் நேரத்திலேயே 2 காட்டு யானைகள் சோலார் மின்வேலிகளுக்கு இடையில் உள்ள நீரோடையில் செல்வது போன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, இரவு நேரங்களில் மட்டுமல்லாது, பகல் நேரங்களிலும் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் உலா வருவதால் தாங்கள் விவசாயம் செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ள நிலையில், வனவிலங்குகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் இது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தாங்கள் நாள்தோறும் ஆளாகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.