
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில், மாம்பாறை எனும் கிராமத்தில் அமைந்துள்ள முனியப்பன் ஆலயம், பிரசித்தி பெற்றது. ஆண்கள் மட்டுமே வழிபடும் ஆலயம் இது என்பது கூடுதல் தகவல்.
இங்கு வேண்டுதல் மற்றும் வேண்டுதல் நிறைவேறிய உடன் ஆடு , கோழிகளை பலி கொடுத்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்து வருகின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு என கோவில் நிர்வாகம் மற்றும் தனியார்களால் சிறிய உணவு பரிமாறும் அறைகள் வாடகைக்கு விடுகின்றனர்.
இங்கு உணவு சமைக்க தேவையான கேஸ் சிலிண்டர்கள் , அடுப்புகள் , பாத்திரங்கள் போன்றவைகளும் வாடகைக்கு அங்கேயே கிடைக்கும்.
இந்நிலையில் தனி நபர்கள் வாடகைக்கு விடும் பொருட்களுடன் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களும் வாடகைக்கு விடப்படுகின்றது . பயன்படுத்திய அளவிற்கு ஏற்ப எடைபோட்டு கிலோ கணக்கில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.
இதனை கண்காணிக்க வேண்டிய சம்மந்தபட்ட அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர். பெரும் விபத்து ஏதேனும் ஏற்படும் முன்னர் உரிய நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.