
குஜிலியம்பாறை தாலுகாவில் கிராமப் பகுதி அனைத்து குளங்களிலும் அனுமதியின்றி மண் திருடப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா மிகவும் வறட்சியான பகுதியாகும்.

இப்பகுதியில் சில ஊர்களில் மட்டுமே விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குஜிலியம்பாறை பேரூராட்சி பகுதியில் உள்ள சின்னகுளம், பெரியகுளம், கருங்குளம் மற்றும் நாயக்கன்பட்டி, கூம்பூர், நாகுல்பட்டி, ஆர்.புதுக்கோட்டை, பில்லமநாயக்கன்பட்டி, பாளையம், டி.கூடலூர், கோவிலூர், புளியம்பட்டி, எரியோடு, வேடசந்தூர், வடமதுரை, தென்னம்பட்டி, அய்யலூர் பாகாநத்தம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமப் பகுதியில் உள்ள குளங்களில் அனுமதியின்றி மர்மகும்பல் இரவு பகலாக 24 மணி நேரமும் பொக்லைன் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்களைக் கொண்டு அளவுக்கு அதிகமாக தோண்டி மண் எடுக்கப்பட்டு டிப்பர் லாரிகளில் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குளங்களில் ஆழமாக தோண்டி மண் எடுப்பதால் குளத்தைச் சுற்றியுள்ள விவசாய கிணறுகள் மற்றும் குடிநீர் ஆழ்துளை கிணறுகள் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் விவசாய பணிகள் நடைபெறாத நிலையில் வெட்ட வெளியாக விவசாயிகள் காட்சியளிக்கிறது.
அனுமதி இன்றி போலி அனுமதி சீட்டு வைத்துக்கொண்டு மண் எடுப்பது குறித்து குஜிலியம்பாறை தாலுகா வருவாய்த்துறையிடம் விவசாயிகள், கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் செய்தால் மிரட்டப்படுவது வழக்கமாக உள்ளது.
தொடர்ந்து நீர் நிலையான குளங்களில் மண் அனுமதி என்று எடுக்கப்பட்டு கடத்தப்படுவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்