
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து நிழல் தரும் மரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இந்த மரங்களின் நிழலில் தான் அங்கு வரும் வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளை பார்க்க வரும் நபர்களும் ஓய்வு எடுத்துவந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழமையான மற்றும் மருத்துவமனைக்கு வருவோர்க்கு நிழல் தந்து கொண்டிருந்த மரங்களை ஒரு கும்பல் வெட்ட தொடங்கியுள்ளது .
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் மரங்களை வெட்டிக்கொண்டிருந்த நபர்களிடம் விசாரித்தபோது வருவாய்த்துறை வட்டாட்சியர் மற்றும் மின்சாரத்துறையினர் அனுமதி அளித்ததாகவும் அதனடிப்படையில் கடந்த ஒரு மாத காலமாக மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆர்வலர்கள் மேல்விபரங்களை அறிய வட்டாட்சியரை அலைப்பேசியில் தொடர்புகொள்ள முயன்றபோது அவர் அலைப்பேசியை எடுக்கவில்லை என்றும் மரங்களை வெட்ட எவ்வித சட்டப்பூர்வ அனுமதியும் யாரிடமும் பெறாமல் சட்ட விதிகளை மீறி அனைத்து மரங்களும் வெட்டி கடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்
தற்போது வெயில் சுட்டெரிக்கும் காலம் அதிலும் மிக பழமையான மரம் என்பதால் இந்த மரங்களில் கூடுகட்டி பறவைகள் குஞ்சு பொரிக்கும் நிலையில் அந்த மரங்களை அடியுடன் வெட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் ஒரு அரசு மருத்துவமனை நிர்வாகம் தலைமையிட அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக பல லட்சம் விலை மதிப்புள்ள மரங்களை தனிநபர்களை வைத்து வெட்டி கடத்துவது சரியா என்றும் மரம் வெட்ட வட்டாட்சியர் அனுமதி பெறப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறும் நிலையில் இந்த மரங்களை வெட்ட எந்த விதி பிரகாரம் அனுமதி தரப்பட்டது என்பதனை வட்டாட்சியரிடம் விசாரணை நடத்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த நூற்றாண்டு கடந்த மரங்களை வெட்டி கடத்திய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் .
