சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4வது ரெயில் பாதை அமைக்க ரூ.300 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பல்வேறு ரெயில்கள் இயக்கப்படுகிறது. மேலும், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மாம்பலம், கோடம்பாக்கம், எழும்பூர் ரெயில் நிலையம் வழியாக சென்னை கடற்கரைக்கு தினசரி 50-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில்கள் இயக்கப்படும் சென்னை கடற்கரை-எழும்பூர் ரெயில் நிலையங்கள் இடையே தற்போது 3 ரெயில் பாதைகள் மட்டுமே உள்ளன. இதில் 2 பாதைகள் புறநகர் ரெயில்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 3-வது பாதையில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து செல்லும் பயணிகள் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் சென்னை கடற்கரை, எழும்பூர் ரெயில் நிலையம் வழியாக செல்ல போதிய ரெயில் பாதை இல்லாததால் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே சுமார் 4.3 கி.மீ தூரத்துக்கு புதிதாக 4-வது ரெயில் பாதை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என ரெயில்வே வாரியத்துக்கு தெற்கு ரெயில்வே பரிந்துரை செய்துள்ளது.
இதற்காக, சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்க மண் பரிசோதனை செய்யப்பட்டு, ரூ.300 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.