கரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் 1500 போலி பயனாளிகள் கண்டுபிடிப்பு ரூ 60 லட்சம் வரை மோசடி என தகவல் – பரபரப்பு* கரூர் மாவட்டத்தில் நெல் வாழை கரும்பு மஞ்சள் என முப்போகம் விளைவிக்கும் சுமார் ஒரு லட்சம் விவசாய நிலங்கள் உள்ளன.
இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரதமரின் கிசான் திட்டத்தில் 78 ஆயிரத்து 517 நபர்கள் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இன்று வரை 3282 நபர்கள் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முறைகேடு புகார்கள் பெறப்பட்டதை அடுத்து கிசான் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி கரூர் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில் சுமார் 1500 போலி நபர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் மூலம் இரண்டு தவணைகளில் ரூ 60 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நபர்களின் சிட்டா அடங்கல் ஆதார் மற்றும் அவர்கள் அளித்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .இன்னும் இரண்டு நாட்களில் மேலும் இந்த முறைகேடுகள் சம்பந்தமாக பலர் சிக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் கிராம நிர்வாக அதிகாரி முதல் உயர் மட்டத்திலுள்ள அதிகாரிகள் வரை பலர் கலக்கத்தில் உள்ளனர்.
கரூர் செய்தியாளர்
எஸ். கண்ணன்