கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் ரயில், பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்கு வரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது எட்டாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து கனிசமான அளவில் இயக்கப்படுகிறது. தமிழகத்திலும் 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி இன்று காலை மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. மதுரையில் இருந்து காலை ஏழு மணிக்கு கிளம்பிய அந்த ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு காலை 7.50 மணிக்கு வந்தடைந்தது. அப்போது ஏற்கனவே ரயில் நிலையத்தில் தயாராக இருந்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் சமூக இடைவெளிவிட்டு ரயில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி முன்பதிவு செய்த பயணிகள் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கிரிமிநாசினி தெளிக்கப்பட்டு பயணிகள் அனைவரும் வெப்ப அளவீட்டு கருவியால் சோதனை செய்யப்பட்டபின்னரே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பயணிகள் அனைவரும் முககவசம் அணிந்திருப்பதும் அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது. இன்று முதல் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கியதை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் தமிழக இருப்பு பாதை காவல்துறையினர் ஆகியோர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.