\மத்திய அரசின் பிரதமர் கிசான் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதா என கண்டறிந்து உண்மையான விவசாயிகளுக்கு உதவி தொகை கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியினர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் .
மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் என ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் பிரதமரின் கிசான் திட்டம் மூலம் வழங்கி வருகிறது.
இதனிடையே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாத பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களை போலி ஆவணங்கள் மூலம் இணைத்து உதவித்தொகை பெற்று வந்துள்ளது தெரியவந்தது.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தற்போது இந்த திட்டத்தின் கீழ் உண்மையான விவசாயிகள் பயன் அடைந்து வருகிறார்களா என்பதை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் அல்லாதோர் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தால் அவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் மற்றும் விவசாய அணி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சி தலைவர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர்.