புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி சேர்ந்தவர் ரகுமான்கான் (வயது38). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.இவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் வானவன் மகாதேவி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு இருவரும் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி இலங்கையில் இருந்து 5 கிலோ தங்க கட்டிகளை ரகுமான்கான் கடத்தி கொண்டு வந்துள்ளார்.இதில் 3 கிலோ தங்க கட்டிகளுடன் 2 கிலோ போலி தங்க கட்டிகளை கொடுத்துள்ளார்.
இதையடுத்து கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ரகுமான் கானை தேவிபட்டினம் வருமாறு சிவக்குமார் அழைத்துள்ளார். இதைத்தொடர்ந்து தனது நண்பர்கள் ராவுத்தர் கனி, அயூப்கான் ஆகியோரை அழைத்துக்கொண்டு தேவி பட்டினம் வந்துள்ளார்.தேவிபட்டினத்தில் தயார் நிலையில் நின்று கொண்டிருந்த காரில் ஏற்றி தேவிபட்டினம் அருகே எலந்தை கூட்டம் கிராமத்திற்கு கடத்தி சென்றனர். அங்கு 5 பேர் கொண்ட கும்பல் இவர்களிடம் தங்கத்தை கேட்டு மிரட்டி தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தேவிபட்டினம் இன்ஸ்பெக்டர் தனபாலன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகுமான்கான் மற்றும் அவரது நண்பர்கள் ராவுத்தர்கனி, அயூப்கான் ஆகியோரை மீட்டனர்.
அவர்களை தாக்கிய நாகப்பட்டினம் சிவக்குமார், ராமநாதபுரம் மருதுபாண்டியர் நகர் முகமது அசாருதீன், வெளிப்பட்டிணம் இஸ்மாயில் சபீர் (வயது 30), பாரதி நகர் யாசின் வயது (30), ஆவுடையார் கோவில் மருதுபாண்டி (49) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதலில் காயமடைந்த ரகுமான்கான் ராவுத்தர் கனி, அயூப்கான் ஆகியோர் ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.