தென்காசி நகரப்பகுதியில் உள்ள அபாயகரமான வளைவுகளில் எதிர்பாராமல் நடக்கும் விபத்துகளை தவிர்க்கும் விதமாக 10க்கும் மேற்பட்ட எச்சரிக்கை விளக்குகளை உதவி காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.
தென்காசி நகர பகுதியில் வாகன எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. மேலும் இதன் காரணமாக ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்கும் விதமாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சுகுனா சிங் உத்தரவின் பேரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தென்காசி மாவட்ட நகர்ப்பகுதிகளில் உள்ள அபாயகரமான வளைவுகளில் ஏற்படும் எதிர்பாராத விபத்துகளை தவிர்க்கும் விதமாக எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த எச்சரிக்கை விளக்குகள் குத்துக்கல்வலசை, தென்காசி பழைய பேருந்து நிலையம், குற்றாலம் சாலை உள்ளிட்ட 12 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மேலும் இந்த எச்சரிக்கை விளக்குகள் மூலம் வாகன ஓட்டிகள் 500 மீட்டருக்கு முன்பே இது விபத்துப் பகுதி என எச்சரிக்கை செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக விபத்துக்கள் கட்டுப்படுத்தப்படும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் காவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.