முன்னோர்கள் போட்ட விதையால் உயர்ந்தோங்கி நிற்கும் மரங்கள், மனித வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாய் இருந்து வருகிறது
மனிதன் தனது நாகரீகத்திற்காகவும் சொகுசு வாழ்க்கைக்காகவும் மரங்களை வெட்டி பாதை அமைத்து கொண்டதன் விளைவு தான் கொரோனா பேரிடர் காலத்தில் மனிதன் சிலிண்டர் தேடி அலைந்தது.
மெத்த படித்த மருத்துவர்களால் கூட தர முடியாத ஆக்ஸிஜனை மரங்கள் இன்றும் தந்து கொண்டுதான் இருக்கின்றன.
மன நிம்மதி தேடி ஆன்மிகம் பக்கம் செல்லும் மக்களுக்கு அங்கு நிற்கும் மரங்களும் ஒரு வித ஆறுதலை தருகிறது.
இந்நிலையில் திருக்கோவிலுக்கு சொந்தமான மரங்களை சப்தமில்லாமல் வெட்டி விற்பனை செய்து வருகிறது ஒரு மர்ம கும்பல்
அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
தென்காசி மாவட்டம் குழல்வாய்மொழி அம்மன் சமேத குற்றாலநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான மரங்கள், தென்காசி யானை பாலத்திலிருந்து குற்றாலம் வரையிலான சாலைகளின் இருபுறங்களிலும் இயற்கைக்கு அழகூட்டும் விதமாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது.
காற்று மழை புயல் என அனைத்திற்கும் ஈடுகொடுத்த மரங்கள், சில சமூக விரோதிகளின் கோடாரிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனது தான் அவலத்தின் உச்சம்.
தென்காசியில் இருந்து குற்றாலம் வரையிலான சாலைகளில் இருபுறமும் இருக்கும் மரங்களை சில சமூக விரோதிகள் இந்து சமய அறநிலை துறை ஊழியர்களின் துணையோடு வெட்டி எடுத்து செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
மேலும் சில நேரம் இயற்கையின் கோர தாண்டவத்தில் விழுகின்ற மரங்களை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு விடுவதாகவும், விழுந்த மரத்தைப்பற்றி சிந்தனை இல்லாமல் மக்கள் செல்லும் நேரம் பார்த்து இந்த சமூக விரோத கும்பல் மரங்களை வெட்டி எடுத்து செல்வதாகவும் கூறப்படுகிறது.
குற்றாலநாத சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான மரங்கள் எவ்வளவு இருக்கிறது என்பது கூட திருக்கோவில் நிர்வாகத்தின் கணக்கில் இருப்பதில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்
இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் இந்த மரக் கடத்தல் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிவன் சொத்து குல நாசம் என்பார்கள், அறநிலை துறை ஊழியர்களை கைக்குள் போட்டு கொண்டு இந்த இழிச்செயல்கள் செய்பவர்களை தண்டிப்பது யார்…?
விசில் செய்திகளுக்காக சரண் மற்றும் குமரன்