செய்திகள்

தமிழக அரசு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’க் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அக்குழுவின் உறுப்பினர்கள் எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், ஜீன் டிரீஸ், எஸ்.நாராயண், மாண்புமிகு தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் இருக்கிறோம். கரோனா காலமாக இல்லாமல் இருக்குமானால் நாம் அனைவரும் நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பினைக்கூட ஏற்படுத்தி இருக்கலாம். கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு நாம் நேரில் சந்திப்போம். இப்படி ஒரு குழுவை அமைத்ததன் மூலமாக தமிழ்நாட்டின் பெருமை உலகளாவியதாக ஆகிவிட்டது. இந்தியாவின் மிக முன்னணி இதழ்கள், இக்குழுவையும் இதில் இடம்பெற்றவர்களையும், தமிழ்நாடு அரசையும், என்னையும் பாராட்டி எழுதினார்கள்.

இந்தப் பாராட்டுகள் அனைத்தையும் மக்களின் மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக வேண்டும். வேலைவாய்ப்புகள் அதிகமாக வேண்டும். தனிநபர் வருமானம் அதிகமாக வேண்டும். மக்களின் சமூக மரியாதை உயர வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அது அமைய வேண்டும். இக்கனவுகள் சாதாரணமாக நிறைவேறி விடாது என்று எனக்கும் தெரியும். நமது சிந்தனை ஒன்றாகவும் – உண்மை நிலவரம் வேறாகவும் இருக்கிறது என்பதை நானும் அறிவேன். தமிழ்நாடு அரசு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் 2 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கின்றன.

நிதி ஆதாரம் என்பது விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சில துறைகளின் மூலமாக மட்டும்தான் வருகிறது. வரி வசூலில் இருந்த மாநில உரிமைகளை மத்திய அரசு ஜிஎஸ்டி மூலமாக பறித்துவிட்டது. அதனால் வரி வசூலை நம்ப முடியாது. நமது வளங்களைக் கொண்டு நம்மை வளப்படுத்திக் கொள்ளும் நிலைமையில் இருக்கிறோம். அதற்கென உள்ள வழிமுறைகளை தமிழ்நாட்டு அரசுக்கு காட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் இயற்கை வளம் உள்ளது. இங்கு சீரான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. மனித வளம் உள்ளது. சமூகப் பொறுப்புணர்வு உள்ளது. உலகம் அறிந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் உலகில் நூற்றுக்கணக்கான நாடுகளில் வாழ்கிறார்கள். இந்த அடித்தளத்தை கொண்டு வளர நினைக்கிறோம். அதற்கு நீங்கள் வழிகாட்டுங்கள். சமூகநீதி – சமத்துவம் – சுயமரியாதை – மொழிப்பற்று – இன உரிமை – மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம்தான் திமுக. நமது வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி – சமூக மாற்றம் – கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்.

வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம் – கல்வி – சமூகம் – சிந்தனை – செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் காணவிரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!

நமது அரசு, தமிழ்நாட்டை தெற்காசியாவிலேயே தொழில் முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக மாற்ற வேண்டும். உலகத்துக்கு மனிதவளத்தை தரும் மாநிலமாக மாற வேண்டும். ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூக ரீதியாகவும் இல்லை என்பதை உருவாக்க வேண்டும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தமிழ்நாட்டை முன்னுதாரணமாகக் கொண்டு வளருவதற்கு திட்டமிடும் சூழலை உருவாக்க வேண்டும். இதற்குத் தேவையான ஆலோசனைகளை நீங்கள் வழங்க வேண்டும்.

என்னுடைய இந்தக் கனவுகள் சாதாரண சீர்திருத்தங்கள் மூலமாக மட்டும் சாத்தியமாகிவிடாது. முழுமையான மாற்றம் – அதிரடியான மாற்றம் மூலமாகத்தான் சாத்தியம் என்பதை நான் அறிவேன். எத்தகைய மாற்றத்துக்கும் தயாராக தமிழ்நாடு அரசு இருக்கிறது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகப்புகழ் பெற்ற பொருளாதாரப் பேரறிஞர் அமர்த்தியா சென்எழுதிய ‘home in the world’ என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூல் நேற்று வெளியாகி உள்ளது. ஒரு சமூகம் சிறப்பாகச் செயல்படுவது என்பதை எப்படி அளவிடுவது? அந்தச் சமுதாயத்தை உருவாக்கும் தனிநபர்களின் நலனைக் கொண்டு அளவிட வேண்டும் என்று அதில் சொல்லி இருக்கிறார்.

இந்த அரசும் அதைத்தான் விரும்புகிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு மனிதரும் மகிழும் வகையில், இது எமது அரசு என்று சொல்லி அனைவரும் பெருமைப்படும் வகையில் இந்த அரசு இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அந்த ஆசையை – கனவை நிறைவேற்றும் கருவிகளில் நீங்களும் இடம்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button