இமாச்சலப் பிரதேச மாநிலம் கின்னார் மாவட்டத்தின் சங்லா பள்ளத்தாக்கில் இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற சுற்றுலா வேன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து நிலச்சரிவில் சிக்கியது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தோ – திபெத் எல்லை போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நிலச்சரிவு காரணமாக சங்லா பள்ளத்தாக்கில் உள்ள பட்சேரி பாலம் இடிந்து விழுந்தது. மலையில் இருந்து கற்களும் பாறைகளும் புழுதியோடு உருண்டு வருவதும் பாலம் உடையும் காட்சிகளின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.