தூத்துக்குடி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலக மேலாளராக பணியாற்றி வருபவர் குருசாமி. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், பத்திரப்பதிவுகளுக்கு லஞ்சம் பெறுவதாகவும் அடுக்கடுக்கான பல புகார்கள் எழுந்தது.
இந்த புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், தூத்துக்குடி கே.டி.சி.நகர் ஹவுசிங் ஃபோர்டு காலனியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் 10 பேர் அடங்கிய குழுவினர், காலை 6.30 மணிமுதல் நடத்தி வரும் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக மாவட்ட பத்திரப்பதிவு மேலாளர் குருசாமியிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பத்திரப்பதிவு மேலாளர் குருசாமியின் வங்கி கணக்கு, அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் பெயரில் உள்ள வங்கி கணக்குகள், சொத்து பத்திரங்கள், பணப்பரிமாற்றங்கள் குறித்த ஆவணம் உள்ளிட்டவைகளும் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்திரப்பதிவு மேலாளர் வீட்டில் நடைபெறும் இந்த சோதனை மாலை வரை நீடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.