ஜார்கண்ட் மாநிலத்தில் மாவட்ட நீதிபதியாக உத்தர் ஆனந்த் பணியாற்றிவந்தார். அவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலையில் நடைப்பயிற்சி சென்றுள்ளார். அப்போது அவர் மீது வாகனம் மோதியதில் சாலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.
மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அடிப்பட்டவர் யார் என்று தெரியாத நிலையில் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், நீதிபதி உத்தம் ஆனந்த் காலையிலிருந்து காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
அதன்பிறகு, குடும்பத்தினரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடலைக் காட்டியுள்ளனர் காவல்துறைனர். அப்போது, நீதிபதியின் குடும்பத்தினரால் அவரது உடல் அடையாளம் காணப்பட்டது. அதனையடுத்து, நீதிபதி உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். நீதிபதி விபத்துக்குள்ளான இடத்திலிருந்த சி.சி.டிவி காட்சிகளைப் பார்க்கும்போது, வேண்டுமென்ற வாகனத்தைக் கொண்டு இடித்துக்கொல்லப்பட்டது தெரியவந்தது. நீதிபதி இடித்துக் கொல்லப்பட்ட வாகனம், அவரைக் கொல்வதற்கு சிறிது முன்னர் திருடப்பட்டுள்ளது.
நீதிபதி பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நீதிபதி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கைவைத்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘இந்த விவகாரம் தொடர்பாக ஜார்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் பேசியுள்ளேன்’.
நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்றும் இதை பார்க்கும் போது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என்றும் பார் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. அது போல் இந்த கொலை சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த வழக்கை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. ரவுடிகளுக்கு ஜாமீன் கொடுக்க மறுத்ததால் உத்தம் ஆனந்த் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.