தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடப்படும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வந்தது. இது தொடர்பான புகார்கள் பேரில் தென்பாக காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகன திருடர்களை தேடிவந்தனர். இந்நிலையில் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீங்கான் ஆபீஸ் அருகே போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை சோதனை செய்ததில் அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு இருசக்கர வாகனம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வாகனத்தில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள், தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் என்பதும், இதே போல இவர்கள் பல்வேறு காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே 10 இருசக்கர வாகனங்களை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 10 இருசக்கர வாகனங்களையும் மீட்டனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுப்பதற்காக பல்வேறு இடங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் மாநகர பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வந்தன. இதுதொடர்பாக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் தூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்த சபீர் முகமது (வயது 20), முத்து என்ற கிருஷ்ணமூர்த்தி(22) மற்றும் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த சண்முகநாதன்(20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமல்லாமல், பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குளத்தூர் அருகே ரூ. 7 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 76 கிலோ கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கஞ்சா கடத்தல், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை, உள்ளிட்ட குற்றச் செயல்கள் யார் ஈடுபட்டாலும் அவர்கள் கைது செய்யப்படுவதுடன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றார்.