நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த 28ஆம் தேதி அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த கௌதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கலைச்செல்வன் தீபன் ராஜ் ஜீவா மாறன் அரசுமணி உள்ளிட்ட 10 பேர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்தநிலையில் நேற்று மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 கடல் மைல் தொலைவில் மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் விசைப்படகில் பல்வேறு இடங்களில் மறைந்து கொண்டனர். அப்போது மீனவர் கலைச்செல்வன் மீது ஒரு துப்பாக்கி குண்டு உரசிசென்றது. இதில் மீனவர் கலைச்செல்வன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் மயங்கி விழுந்த மீனவரை இன்று காலை நாகை துறைமுகத்திற்கு மீனவர்கள் கொண்டு வந்தனர். அங்கிருந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக நாகை பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையால் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்பொழுது துப்பாக்கி சூடு சம்பவத்தில் மீனவர் படுகாயம் அடைந்திருப்பது மீனவர்கள் மத்தியில் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
செய்திகள் : ச.ராஜேஷ், நாகை