நேற்று 02.08.2021 திருநெல்வேலியை சேர்ந்த ஒய்வு பெற்ற அதிகாரி ஒருவரது வீட்டில் விலை மதிப்புள்ள புராதன அம்மன் சிலை ஒன்று உள்ளது என்ற ரகசிய தகவல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு வந்தது. இதன் அடிப்படையில் மேற்படி வீட்டிற்கு சென்று விசாரணை செய்ததில், அவர் தன்னிடம் சுமார் 2 அடி உயரமுள்ள வெண்கலத்திலான லட்சுமி அம்மன் சிலை ஒன்று இருப்பதாக ஒப்புக்கொண்டார். மேலும் அந்த சிலையினை அவரது சகோதரி கொடுத்ததாக கூறினார்.
அதனடிப்படையில் அவரது சகோதரியிடம் விசாரிக்கும் போது, அவர் தனது மாமனார் காலத்திலிருந்து வீட்டில் வைத்து வழிபாடு செய்து வருவதாகவும், மேற்படி மாமனார் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவகட்டதாகவும், தனது கணவர் காலமான பிறகு தனது சகோதரியிடம் 1990 ஆம் ஆண்டு அச்சிலையை கொடுத்ததாகவும் கூறினார். ஆனால் அவரிடம் மேற்படி சிலை சம்மந்தமாக எந்த ஒரு ஆவணங்களும் இல்லை. இச்சம்பவம் குறித்து சட்டப் பிரிவு 102 குற்ற விசாரணை முறை சட்டத்தின் கீழ் ( section 102 CrPC ) சிலை திருட்டு தடுப்பு பிரிவு துறையினரால் இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி அம்மன் சிலை மீட்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சிலை ஏதேனும் கோவிலுக்கு சேர்ந்ததா என்பது பற்றியும் அந்த சிலையின் தொன்மைத்தன்மை பற்றியும் சிலை திருட்டு தடுப்பு பிரிவினரால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.