செய்திகள்தொழில்நுட்பம்

செல்போனை ஹேக் செய்து வங்கிப்பணம் சுருட்டல்: சென்னைவாசிகளை குறிவைத்து நடக்கும் நூதன வங்கி மோசடிகள்

சென்னை ஏடிஎம் பின்நம்பர், ஓடிபி எண் போன்ற எந்த விவரங்களையும் கேட்காமல் வாடிக்கையாளர்களின் செல்போனை ஹேக் செய்து அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்டும் கும்பல் சென்னையில் கைவரிசை காட்டி வருகின்றனர். மோசடி கும்பல் அனுப்பும் கியூ-பே செயலியை பதிவிறக்கம் செய்ததால் பெண் மருத்துவர் ஒருவர் ரூ.2.4 லட்சம் பணத்தை இழந்துள்ளார். நவீன தொழில்நுட்ப யுகத்தில் வங்கிகளுக்கு நேரடியாக செல்பவர்களை விட ஏடிஎம் மற்றும் இணையதளங்கள் மூலம் வங்கி கணக்குகளை நிர்வகிப்பவர்களே அதிகம். அதனை பயன்படுத்தி அதிக அளவில் மோசடிகளும் நடந்து வருகின்றன.

இதுவரை வங்கி கணக்கு எண், ஏடிஎம் பின்நம்பர், ஓடிபி எண் போன்றவற்றை பெற்று கைவரிசை காட்டிவந்த கும்பல் இப்போது மோசடிக்கு என்று புதிய செயலிகளை உருவாக்கியுள்ளனர். அதனை பதிவிறக்கம் செய்யும் வாடிக்கையாளர்கள் செல்போனை ஹேக் செய்து அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை சுருட்டுகின்றனர். அப்படி பாதிக்கப்பட்டவர்களில் சென்னை அண்ணா நகரை சேர்ந்த பெண் மருத்துவர் சாந்தினி பிரபாகர் என்பவரும் ஒருவர். அவரது செல்பேசிக்கு செல்சேவை வாடிக்கையாளர் மையம் என்ற பெயரில் குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் உங்களை பற்றிய முழு விவரங்களை அளிக்க வேண்டும். அதற்கு தவறினால் சிம் கார்டு செயலிழந்துவிடும் என கூறப்பட்டிருந்தது.

எனவே குறுந்தகவலில் இடம்பெற்றிருந்த எண்ணிற்கு மருத்துவர் சாந்தினி தொடர்பு கொண்டுள்ளார். அப்போது மறுமுனையில் பேசியவர்கள் கியூ பே செயலி லிங்க் ஒன்றை அனுப்புவதாகவும் அதன் மூலம் 10 ரூபாய் பணப்பரிமாற்றம் செய்தால் உங்களுக்கான சேவையை தொடர முடியும் என கூறியுள்ளனர். அதன்படி கியூ பே செயலியை பதிவிறக்கம் செய்து தமது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.10 அனுப்பியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக்கணக்கில் இருந்து 1.90 லட்சம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் என அடுத்தடுத்து 2 தடவைகள் பணம் எடுக்கப்பட்டு இருப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

அதுகுறித்து வங்கிக்கு தெரியப்படுத்த முயன்றுள்ளார். அவரது செல்போன் ஹேக் செய்யப்பட்டு இருந்ததால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் ட்ருகாலரில் பார்த்தபோது அது இண்டர்நெட் அழைப்பு என்பதும் வோடஃபோன் கே.ஒய்.சி சர்வீஸ் என்ற பெயர் இருந்ததாகவும் சாந்தினி பிரபாகர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார். டீம்வீவர் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் மூலம் மோசடிகள் நடப்பது தெரிய வந்துள்ளது. இந்த மோசடி குறித்து அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற மோசடிகள் செல்போன் நிறுவன வாடிக்கையாளர்களை குறிவைத்து அரங்கேறுகின்றன. குறிப்பாக பிஎஸ்என்எல், வோடஃபோன் நிறுவன வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக அளவில் புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிம் கார்டு புதுப்பிப்பு என்ற பெயரில் செல்போனை ஹேக் செய்து வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை சுருட்டும் சம்பவம் வங்கி வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button